I. காற்றாடிமலைக் கதிரவன்
அனலுரை
காற்றாடி மலைக்
கதிரவனாய் இன்று உலகெங்கும் கிறித்தவ நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகளை பரவ விட்டு
உயர்ந்து நிற்பவர் இறை ஊழியர் தேவசகாயம். இவரைப் பற்றிய கேள்வி - பதில்களாய் ‘காற்றாடிமலைக் கால்தடங்கள்’ மற்றும் கடித வடிவில் காற்றாடிமலைக் கடிதங்கள்’
போன்ற இரு படைப்புகளை
தமிழ் கூறு நல்லுலகிற்குத் தந்த ஆசிரியர்களின் புதுப்படைப்பாய் பொலிவுடன்
வெளிவருகிறது இச்சிறு வரலாற்றுப் பெட்டகம்.
இறை ஊழியர்
தேவசகாயம் பற்றி எல்லா தரப்பினரும் இனிதாய் வாசித்து எளிதாய் புரிந்து கொள்ளும்
வகையில் கையடக்கப் பதிப்பாக எல்லா குறிப்புகளையும் உள்ளடக்கி மக்கள் பதிப்பாக
வெளிவருகிறது, “காற்றாடிமலைக்
கதிரவன்” என்னும்
இச்சிறுநூல்.
இந்நூலுக்கு
உருக்கொடுத்த ஆசிரியர்கள் வெனிஷ், அருளன், பெரி ஆகியோருக்கு நன்றி! அச்சிட்ட பிரிண்ட்
பாயின்ட் அச்சகத்தாருக்கு நன்றி! முகப்போவயம் தீட்டிய திரு. லியோ ராய்
அவர்களுக்கும் நன்றி!
மக்கள்
எல்லாருடைய மனங்களிலும் இறை ஊழியர் தேவசகாயம் கதிரவனாய் ஒளி வீசட்டும். கிறித்தவ
நம்பிக்கை நன்னெறிகளாய் தளிர்க்கட்டும்.
வாழ்த்துக்கள்!
11.03.2011 அனல் வெளியீட்டக நண்பர்கள்
நாகர்கோவில் திருவள்ளுவர் நூல் நிலையம்
ஆசிரியர்கள் உரை:
எம் அன்புக்கு
இனியவரே!
பிறர்சுவைக்க
இதழ்விரித்து இனிய தேன்கொடுத்து தன்சுவை
தனைமறந்து சக்கையாய் மாறிவிடும் சுவைமிகு
பூவுக்கு சன்மானம் உண்டா?...
பிறரை
அழகுபடுத்தி அழகுக்கு அழகு சேர்த்து பிறர் மணம்வீச
தன்மணம் தானம்செய்து வாடிய பூவுக்கு
வழித்தடம் உண்டா?...
காலையில்
கூந்தலிலே கருத்தாகக் குடியேறி மாலையில்
சாலையிலே சருகாக எறியப்படும் மணமான பூவுக்கு
சரித்திரம் உண்டா?...
ஆனால் ...
வாடாத பூவொன்று
வானவில்லின் வண்ணத்தில் ஊரெல்லாம்
ஊர்வலமாய் பயணங்கள் மேற்கொண்டு வரலாற்றில்
வாழ்ந்ததாக வழித்தடம் உண்டு.
சாகாத பூவொன்று
சங்கடங்கள் அனைத்தையுமே சாதனையாய்
மாற்றிவிட்டு நறுமணத்தோடு சலனத்தை சளைக்காமல்
ஏற்படுத்திய வரலாறு உண்டு.
அந்தப்பூவே...
இறை ஊழியர் தேவசகாயம்.
இந்த அதிசயப்
பூவை கசங்கிடாமல் கோர்த்தோம் எடுத்துச்சூட
வாருங்கள் மங்காத மணத்துடனே உங்கள் வாழ்வும்
வளமாகும்.
அன்புடன்
ஆசிரியர்கள்.
கதிரவனின்
கதிர்பட்டு...
| I | தளிர் விடும் மொட்டு |
| II | மலரான மொட்டு |
| III | மணம் பரப்பிய மலர் |
| IV | கசக்கப்பட்ட மலர் |
| V | தூக்கி வீசப்பட்ட மலர் |
| VI | விதையான மலர் |
| VII | புனிதமான மலர் |
பாகம் I.
தளிர் விடும்
மொட்டு
இறை ஊழியர்
தேவசகாயம் கி.பி.1712-ஆம் ஆண்டு ஏப்ரல்
23-ஆம் நாள் கன்னியாகுமரி
மாவட்டம் நட்டாலத்தில் வாசுதேவன் நம்பூதிரிக்கும், தேவகியம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார்.
இயற்பெயர் நீலகண்டன். இவருக்கு லெட்சுமிக்குட்டி என்ற ஒரு தங்கையும் உண்டு.
வாசுதேவன் நம்பூதிரி கொல்லம் காயங்குளம் அருகிலுள்ள மருதங்குளக்கரை கிராமத்தை
சார்ந்தவர். நட்டாலம் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார்.
இவர் தனது பிறந்த ஊரான மருதங்குளக்கரை மீது கொண்ட பற்றின் காரணமாக, நட்டாலத்தில் தனது இல்லத்திற்கு ‘மருதங்குளக்கரை’ என பெயர் வைத்தார்.
மருதங்குளக்கரையில்
வளர்ந்த நீலகண்டனிடம் சிறுவயதிலேயே அறிவும், நுணுகி ஆராயும் திறனும் இருந்தன. பகுத்தறிவோடு
எது உண்மை? எது பொய்?
என ஆராய்ந்தறியும் திறன்
பெற்றிருந்தார். தன் தங்கை லெட்சுமிக் குட்டியோடு வீர விளையாட்டுகளில் ஈடுபடுவார்.
பாகம் II.
மலரான மொட்டு
1. ஆசிரியர்
சான்றதிரு கரைகண்ட முத்தப்பர்
கி.பி 1669-இல் பிறந்தவர் ‘சான்றதிரு கரை கண்ட முத்தப்பர்’. இவர் தோமையார்க் கால கத்தோலிக்கத் திருமறையின்
உறுப்பினர். ‘பரைக்கோடு ஆசான்’
என அழைக்கப்பட்ட இவரிடம்
தேவசகாயம் கல்வி கற்றார்.
வடமொழி, மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
தத்துவம், இலக்கணம் போன்றவற்றில் தன் திறமையை
வெளிப்படுத்தினார். மேலும் சண்டைப்பயிற்சி, வர்மசாஸ்திரம், சிலம்படி, அம்பு எய்தல், களரி போர்ப்பயிற்சி போன்றவற்றையும் கற்று திறன்
பெற்று விளங்கினார்.
ஒழுக்கத்திலும்
உயர் பண்புகளிலும் சிறந்து விளங்கினார். இங்கு இவருடன் கல்வி கற்றவர்களில்
முக்கியமானவர்களான கோட்டவிளை ஆசான் தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி, தொம்மன் திருமுத்து, மரியமல்லன் மாயக்குட்டி ஆகியோர் இறுதிவரை
இணைபிரியா நண்பர்களாக இருந்தார்கள்.
2. நண்பர்கள்
(அ) தொம்மன்
திருமுத்து
கி.பி 1712-இல் தொம்மன் திருமுத்து பிறந்தார். இவர்
பரைக்கோடு ஆசான் சான்றதிரு கரைகண்ட முத்தப்பரின் மகன். இவர் ஒரு கவிஞர். மன்னர்
மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில் பணியாற்றினார். தோமையார் சரித்திரம், மூன்று அரசர்கள், எஸ்தாக்கியார், ஞானசௌந்தரி, இராயப்பர், சின்னப்பர் போன்ற நாடகங்களை எழுதியவர்.
மிக்கேல் அதிதூதர் தியானத்திலும் வர்மானி வைத்தியத்திலும், பேய் ஓட்டுவதிலும் பெயர் பெற்றவர்.
தேவர்களின்
பாடல்களை எழுத மறுத்ததால் திருவிதாங்கோடு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு
தேவசகாயத்துடன் சேர்ந்து ஆண்டவரைப் போற்றி புகழ்ந்து பாடினார். தேவசகாயத்தைப்
பற்றி இவர் 190 கவிதைகளை
எழுதினார். இவர் கி.பி.1795-இல் காலமானார்.
(ஆ) தொம்மை
சின்னத்தம்பி அண்ணாவி
கி.பி. 1716-இல் தொம்மை சின்னத்தம்பி அண்ணாவி பிறந்தார்.
இவர் மார்த்தாண்ட வர்மாவின் மெய்க்காவலர்களில் ஒருவர். மணலி சந்திப்பின்
அளவட்டிவிளைக்கு சொந்தக்காரர். திருவிதாங்கோடு நாட்டின் பண்டாரப்பாளையத்
தரைப்படையின் தலைவராக இருந்தவர். இவர் கி.பி.1770-இல் காலமானார்.
(இ) மரிய மல்லன்
மாயக்குட்டி
கி.பி. 1717-இல் பிறந்தவர் மரிய மல்லன் மாயக்குட்டி. இவர்
திருமுத்துப் பண்டாரப்பாளையக் குதிரைப்படையின் தலைவர். ‘தேவசகாயத்தைக் கொல்லக்கூடாது’ என்று அரசரின் படைகள் மூலம் குரல் கொடுத்தவர்.
கி.பி. 1793-இல் காலமானார்.
கி.பி. 1771-இல் இறந்த ஆசிரியர் ‘கரைகண்டமுத்தப்பர்’ தனது மாணவனான தேவசகாயம் மீது அளவற்ற அன்பு
வைத்திருந்தார். தேவசகாயம் நற்குணம் நிறைந்தவராக வாழ்ந்து வந்ததால் தன்
குழந்தையைப்போல வழி நடத்தினார். நண்பர்களும் தேவசகாயத்தின் மீது மிகுந்த பாசம்
வைத்திருந்தனர்.
தேவசகாயம்
திருவோணப் பண்டிகையின் போது ஆட்டுக்கிடாவை அடக்கி அரசனிடமிருந்து பரிசு பெற்றார். வீரவிளையாட்டுகளில்
ஈடுபட்டார். எல்லோரிடமும் அன்பாக, அமைதியாக
பழகுவதால் குடும்பத்தார்கள் இவரை ‘அன்புநாயகன்’
‘தர்மதயாளன்’ ‘நல்லத்தலைவன்’ என அழைத்தனர்.
பாகம் III.
மணம் பரப்பிய
மலர்
1. அரசவையில் பணி
கி.பி. 1728-இல் ‘வாஞ்சிநாட்டு ஜீலியஸ் சீசர்’ என்றழைக்கப்பட்ட மன்னர்
மார்த்தாண்ட வர்மா திருவிதாங்கூரில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். தனது எதிரிகளை
கொன்றொழித்து, அண்டை நாடுகளை
வெற்றிக்கொண்டு வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பதிவு செய்த இவர், திருவிதாங் கோட்டை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி
செய்து வந்தார். செல்வச் செழிப்புடன், ஒழுக்கத்துடன் வளர்ந்த தேவசகாயத்திற்கு அவ்வூரில் ஏராளமானோர் பெண்
கொடுப்பதற்கு தயாராக இருந்தனர்.
தலக்குளம்
கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து திருவிதாங்கோட்டின் மேற்கு பக்கமுள்ள அமராவதி
குளத்தின் ஓரத்தில் அமைந்த மேக்கோடு குடும்பத்திலிருந்து பார்கவி என்னும் நற்குண
நங்கையை மணம்பேசி முடித்தார்கள். பனை ஓலையில் எழுதி திருமண அழைப்பிதழ்
கொடுக்கப்பட்டது. வழக்கமாக நடைபெறும் நாயர் குலத்தவர்களின் திருமணத்தைக்
காட்டிலும் சீரும் சிறப்புமாக திருமணம் நடைபெற்றது.
நண்பர்களும்,
உற்றார் உறவினர்களும்
ஒன்று கூடி நடந்த நிகழ்வு திருவிழாக்கோலம் பூண்டிருந்தது. திருமணத்தன்று இவருடைய
ஆசிரியர் சான்றதிரு கரைகண்ட முத்தப்பர் வாள் ஒன்றை பரிசளித்தார். இல்லற வாழ்க்கையை
நல்லறமாக நடத்தினார்கள் புதுமணத் தம்பதிகள்.
கி.பி.1740-இல் தனது 28-ஆவது வயதில் தேவசகாயம் மன்னர் மார்த்தாண்ட
வர்மாவிடம் பணியில் சேர்ந்தார். இவருடைய நண்பரான தொம்மன் திருமுத்துவும் இதே
நாளில்தான் அரண்மனை பணியாளர் ஆனார். தேவசகாயத்தின் தாய்மாமா இராமன்பிள்ளை
அப்பகுதியில் செல்வாக்கு மிகுந்தவராய் இருந்தமையால் தேவசகாயம் அரண்மனை வேலையில்
எளிதாக சேர முடிந்தது.
இந்த
இராமன்பிள்ளை நட்டாலம் ஆதிகேசவப் பெருமாள் கோவிலையும், அதன் நிலங்களையும் பராமரித்து வந்தவர். இவர்
தேவசகாயத்தின் தாயாரான தேவகியம்மையின் அண்ணன். இவரும் தேவசகாயத்தின் தந்தையுமான
வாசுதேவ நம்பூதிரியும் நெருங்கிய நண்பர்கள்.
தேவசகாயம்
பத்மனாபபுர அரண்மனையில் அரசு அலுவலராக பணியமர்த்தப்பட்டார். இவர் கோவில்
காரியங்களை கவனித்தல், படைப்பிரிவு
அதிகாரிகளுக்குச் சம்பளம் வழங்குதல், பத்மனாபபுரம் கோட்டைக் கட்டும் பணிக்கு பொருள் சேர்த்தல், வேலையாட்களுக்கு கூலி கொடுத்தல், அரண்மனை சம்பந்தமான மேல் கவனிப்பு போன்ற
பணிகளையும் செய்து வந்தார்.
2. டச்சுப்
போர்ப்படைத் தளபதி டிலனாய்
கி.பி. 1741 சூன் மாதம் 27-ஆம் நாள் குளச்சல் கடற்போர் நடைபெற்றது. பலர்
இறந்தனர். சிலர் சரணடைந்தனர். 23 பேர் கைது
செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை உதயகிரிக் கோட்டையில் சிறைவைத்தனர்.
வெற்றியின் அடையாளமாகக் குளச்சல் கடற்கரையில் திருவிதாங்கூர் அரசின் சங்கு சக்கர
முத்திரையினைத் தாங்கிய கல்தூண் ஒன்றை நிறுவினார்கள்.
கைது
செய்யப்பட்டவர்களில் ஒருவர் டிலனாய். எஸ்தாக்கியுஸ் பெனடிக்ட் டிலனாய் என்பது
இவரது முழுப்பெயர். இவர் ஒரு டச்சுப் போர்ப்படைத் தளபதி. பெல்ஜியம்
நாட்டைச்சேர்ந்தவர். மனைவியின் பெயர் மார்கரித்தா டி அல்மேதா. இவர் ஏழைகளின் மீது
மிகுந்த அன்பும், கரிசனையும்
கொண்டமையால் எல்லோரும் இவரை ‘ஏழைகளின் தாய்’
என அழைத்தார்கள்.
கி.பி. 1766-
இல் ஐம்பதாயிரம் இராணுவ
வீரர்களை ஐரோப்பிய முறையில் பயிற்சி அளித்து ‘திருவிதாங்கூர் லைன்ஸ்’ என்ற புகழ்வாய்ந்த இராணுவ அணியை அமைத்த டிலனாயை
மன்னர் தன் படையில் பயன்படுத்திக் கொள்ள எண்ணினார்.
ஏனெனில் டிலனாய்
ஒரு சிறந்த போர்வீரர். போரின் பல நுணுக்கங்களை தெரிந்தவர். டிலனாயின் சம்மதத்துடன்
அரசர் படைப்பிரிவின் தளபதியாக்கினார். டிலனாயும் உண்மையான வீரனாய் தன்னையே
நாட்டுக்கு அர்ப்பணித்தார். மன்னரின் கட்டளைகளைத் தட்டாத ஒரு மாபெரும் வீரனாய்த்
திகழ்ந்தார்.
கி.பி. 1741-இல் டிலனாயின் ஆலோசனை யுடனும், தேவசகாயத்தின் மேற்பார்வையிலும் மன்னர்
மார்த்தாண்ட வர்மா ஒரு கோட்டையைக் கட்டினார். டிலனாய், பத்மனாபபுரம் கோட்டைக்கு வடக்கே ஆயுதங்கள்
உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை நிறுவினார்.
தனது சொந்த
வழிபாட்டிற்காக உதயகிரிக் கோட்டையில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தைக்
கட்டினார். இவர் ‘திருவிதாங்கூர்
லைன்ஸ்’ என்ற
மண்கோட்டையையும், பத்மனாபபுரம்
உதயகிரியில் கருங்கல்லானக் கோட்டைகளையும், ஆரல்வாய் மொழியிலும், திருவனந்தபுரத்திலும்
புதியக் கோட்டைகளையும் கட்டினார்.
பத்மனாபபுரம்,
கொல்லம், மாவேலிக்கரை, சங்ஙனாச்சேரி பகுதியில் இருந்த பழையக்
கோட்டைகளை புதுப்பித்தார். டிலனாயின் வெற்றிகளைக் குறித்து திருவிதாங்கூர் வரலாறு
இவரை ‘வலிய கப்பித்தான்’
(பெரிய காப்டன்) என்று
அழைத்தது.
3. நண்பர்களாக
டிலனாயும் தேவசகாயமும்
கி.பி. 1744-இல் உதயகிரிக் கோட்டையைக் கட்டும் பணி
நிறைவடைந்தது. தேவசகாயமும், டிலனாயும்
நெருங்கிய நண்பர்களாயினர். ஒரு நாள் தேவசகாயம் சோகமாக இருப்பதைக் கண்ட டிலனாய்
என்ன நடந்தது எனக்கேட்டார்.
தேவசகாயம்
மறுமொழியாகக் குடும்பத்தில் அமைதி இல்லையென்றும், மாடுகள் மடிந்தன, நில வருமானம் தேய்ந்தது, நோய் நொடிகள் அதிகமாயின, அல்லல்கள் சூழ்ந்தன என்றார். டிலனாய் அணைக்கும்
தோழனாய் ஆறுதல் கூறினார்.
நீதிமான்
யோபுவினுடைய வரலாற்றைச் சொல்லி இறைவிசுவாசத்திலும், நம்பிக்கையிலும் ஆழப்படுத்தினார். யோபுவின்
மனம் தளராத விசுவாசமும், இறைவேண்டலும்
தேவசகாயத்திற்கு அதிசயத்தைத் தந்தது. இதயத்திற்குள் கிறித்தவ விசுவாசத்தையும்
இறைவனையும் ஏற்க அடித்தளம் அமைத்தது.
கி.பி. 1739-இல் பதிமூன்று நண்பர்களுடன் கொச்சி சேசுசபையின்
மாகாணப் பிரிவில் பணியாற்ற வந்தார் பணி.ஜியோ வான்னி பத்திஸ்தா புத்தாரி.
இந்தியாவில் இவரை ‘பரஞ்சோதி நாதர்’
என்றழைத்தார்கள். இவர் கி.பி. 1707-இல் பிப்ரவரி 22-ஆம் நாள் ஓசிமா என்னும் நகரில் இத்தாலியில்
பிறந்தவர். தனதுக் கல்லூரி படிப்பை உரோமையிலுள்ள சேசுசபைக் கல்லூரியில்
முடித்தார். கி.பி. 1738-இல் இறையியல்
கல்வியை நிறைவு செய்தார்.
இரண்டு ஆண்டுகள்
கொச்சியில் பணியாற்றிவிட்டு 16-ஆவது
பங்குப்பணியாளராக வடக்கன்குளம் திருக்குடும்ப ஆலயத்தில் பணியாற்றிக்
கொண்டிருந்தார். சில நாட்கள் கழித்து டிலனாயின் அறிவுரையால் தேவசகாயம் தான்
கிறித்தவ மதத்திற்கு மாற விரும்புவதாகவும், உண்மைக் கடவுளை ஏற்க விரும்புவதாகவும் தனது
விருப்பத்தை டிலனாயிடம் தெரிவித்தார். டிலனாய் மகிழ்ச்சியுடன் வடக்கன்குளம்
பணியாளர் பணி. புத்தாரியை சந்திக்குமாறு கடிதம் ஒன்றைக் கொடுத்தனுப்பினர்.
4. நீலகண்டன்
தேவசகாயம் ஆதல்
கி.பி.1741 முதல் கி.பி. 1750 வரையுள்ள 9 ஆண்டுகள் நேமன் சபையின் தலைமைக்குருவாக
பணியாற்றிய பணி.புத்தாரியிடம் தேவசகாயம் கடிதத்தைக் கொடுத்தார். டிலனாய்
அனுப்பியதாகவும், கிறித்தவ
மதத்தில் சேர தனக்கு விருப்பமாக இருப்பதால் திருமுழுக்கு வேண்டும் என்றும்
கூறினார். பணி.புத்தாரி அவர்கள் தேவசகாயத்திடம் முழுமையாக விபரங்களைக் கேட்டு
தெரிந்து கொண்டார்.
தேவசகாயம் ஓர்
அரண்மனை ஊழியர் என்பதால் திருமுழுக்குக் கொடுப்பதற்குத் தயக்கம் காட்டினார்.
ஏனெனில் திருவிதாங்கூர் அரசவையில் உயர் பதவி வகிக்கும் எவரும் ‘அரசவைப் பணியை விட்டுவிட்டு கிறித்தவரானால்
சிறையிலிட்டுக் கொன்றுவிடுவதாக’ மன்னர் ஆணை
பிறப்பித்திருந்தார். புத்தாரியின் தயக்கத்தைக் கண்ட தேவசகாயம் தான் கல்வி கற்று
தெளிந்தவரென்றும், இதனால் தனக்கு
வரப்போகும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக அறிந்தே திருமுழுக்கு பெற
வந்திருப்பதாகவும் கூறினார். இதைக்கேட்ட பணி.புத்தாரி மகிழ்ச்சியுடன்
சம்மதித்தார்.
கி.பி. 1745 மே திங்கள் 17-ஆம் நாள் வடக்கன் குளம் ஆலயத்தில் ‘லாசர்’ என்ற பெயருடன் திருமுழுக்குப் பெற்றார். ‘லாசர்’ என்பதற்கு ‘இறைவனின் உதவி’
என்பது பொருள். இதனுடைய
பெயர்ச்சொல் தான் ‘தேவசகாயம்’.
40 நாட்கள்
வடக்கன்குளத்தில் தங்கியிருந்து அங்கு உபதேசியாக இருந்த ஞானப்பிரகாசம் என்பவரிடம்
மறைக்கல்வி கற்று, திருமுழுக்கிற்கான
தயாரிப்பையும் செய்தார். மறையையும் முழுமையாகக் கற்றார். இந்த ஞானப்பிரகாசமும்,
அவருடைய மனைவி தெரசாவும்
தேவசகாயத்தின் ஞானப்பெற்றோர்களானார்கள்.
திருமுழுக்கு
பெற்று கிறித்தவராக வாழத்தொடங்கிய தேவசகாயம் அரண்மனை வந்து தன் பணியைத்
தொடர்ந்தார். கிறித்தவம் தந்த மகிழ்ச்சியை தன்னோடு பணியாற்றியவர்களோடு பகிர்ந்து
கொண்டார். எப்பொழுதும் மகிழ்ச்சியாகக் காணப்பட்டார்.
5. தேவசகாயத்தின்
மனைவியின் மனமாற்றம்
கி.பி. 1736 முதல் மார்த்தாண்ட வர்மாவின் அரண்மனையில்
இராமையன் என்பவர் தளவாயாக பணியாற்றி வந்தார். இவர் திருநெல்வேலி மாவட்டம்
ஏர்வாடியைச் சார்ந்தவர். சிறந்த இராசபக்தர், வீரசிகாமணி, கடமைவீரர், நம்பிக்கை நட்சத்திரம் என்றெல்லாம்
அழைக்கப்பட்டவர்.
எதிரிகளை
பணத்தாலும், படையாலும்
முறியடித்தார். முக்கியமான ஆலோசகராக தளவாயை
மன்னர் வைத்திருந்தார். சில நாட்கள் சென்ற பிறகு ‘தேவசகாயம் கிறித்தவ மதத்திற்கு மாறிவிட்டார்’
என்ற செய்தி நாடெங்கும்
பரவியது.
இவ்வேளையில்
தேவசகாயத்திடம் ஏற்பட்ட மாற்றத்தை மனைவி பார்கவி கண்டார். மனைவியிடம் நடந்ததைக்
கூறி, கிறித்தவத்தைப் பற்றி
எடுத்துக்கூறி மதம் மாறும்படி கேட்டுக் கொண்டார். குழம்பிய மனைவி தன் தாயிடம்
சென்று நிகழ்ந்ததைக் கூறினார். அவர் தாயும் தன் மருமகனான தேவசகாயத்திடம்
புத்திமதிக்கூறி மனம் மாற்ற முயற்சித்தார். ஆனால் தேவசகாயம் தான் கொண்ட கொள்கையில்
உறுதியாய் இருந்தார்.
கிறித்துவைப்
பற்றியும், சாதிமதங்களைக்
கடந்த இறைவனின் சமத்துவ போதனைகளைப் பற்றியும் மாமியாருக்கு விளக்கி கூறினார்.
மாமியார் ஒன்றும் புரியாமல் வெளியேறினார். அனைத்தையும் பொறுமையாய்க் கேட்ட மனைவி
பார்கவி திருமுழுக்கு பெற சம்மதம் தெரிவித்தார்.
கி.பி. 1745-க்கும் கி.பி.1749-க்கும் இடைப்பட்ட ஆண்டில் பார்கவி, ‘ஞானப்பூ’ (தெரேசா) என்ற பெயருடன் வடக்கன்குளம் ஆலயத்தில்
பணி.புத்தாரியிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார். வடக்கன்குளம் வேதியர்
ஞானப்பிரகாசம் மற்றும் அவரது மனைவி திரேசாவுமே ஞானப்பூவிற்கும்
ஞானப்பெற்றோர்களானார்கள்.
திருமுழுக்குடன்
கிறித்தவத்தை பற்றிக் கொண்ட தம்பதிகள் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கும்
கிறித்தவத்தை அறிவித்தனர். இச்சமயத்தில் தேவசகாயத்தின் குடும்பத்தில் நிகழ்ந்த
அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணம் தேவசகாயத்தின் மனமாற்றம் எனக்
குடும்பத்தார்கள் நம்பினார்கள்.
இதற்கு
பிராயசித்தமாக குடும்ப தேவதையான பத்திரகாளிக்கு நட்டாலம் வீட்டில் வைத்து விழா
எடுக்க முடிவெடுத்தனர். எதிர்பாராதவிதமாக விழா நாளில் நட்டாலம் வீட்டிற்கு வந்த
தேவசகாயத்திடம் குடும்பத்தார் விவாதம் செய்தனர். தேவசகாயம் பொறுமையாக தன்
பத்மனாபபுரம் வீட்டிற்குத் திரும்பினார்.
தேவசகாயத்திடம்
விவாதிக்க வந்த பூஜாரிகளை, அவர்கள் மக்கள்
மீது சுமத்தியிருந்த மூடத்தனங்களை வைத்தே மடக்கினார். நீதியற்ற சாதி பேதங்களைச்
சாடினார். மன்னர், அமைச்சர்கள்
ஒழுக்கக் கேடுகளையும் எடுத்துரைத்தார்.
பாகம் IV . கசக்கப்பட்ட மலர்
1. சுமத்தப்பட்ட
குற்றச்சாட்டுகள்
கி.பி. 1749 சனவரி மாதம் இராமையன் தளவாய்
வட்டாட்சியாளர்களுக்கு கடுமையான ஆணைகள் பிறப்பிக்க உத்தரவிட்டார். அதில்
கிறித்தவர்களைக் கொடுமைப்படுத்தும் தண்டனைகள் மிக அதிகமாக இருந்தன.
ஒரு நாள்
தேவசகாயம் தங்கியிருந்த பத்மனாபபுரம் குன்றிக்காடு வீட்டிற்கு வந்த அந்தணர்கள்
தேவசகாயத்தை மனம்மாற்ற முயற்சித்தனர். தேவசகாயம் பொறுமையாக இறைவனைப் பற்றி எடுத்து
கூறினார்.
ஆனால் அந்தணர்கள்
அதைக் கேட்க மறுத்த வேளையில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றியது. ‘உங்களுடைய மதத்தையும், உன்னையும் இந்த நாட்டை விட்டு விரட்டுவேன்’
என்ற அந்தணர்களோடு நடந்த
விவாதத்தில் எழுந்த பூணூல் - அரைஞாண் பற்றிய கருத்து அந்தணர்களை மிகவும்
கோபப்படுத்தியது.
கி.பி. 1749 வரையிலும் அரண்மனை அதிகாரியாக பணியாற்றிய
தேவசகாயத்தைப் பற்றி அந்தணர்கள், ‘கிறித்தவம்
தழுவிய தேவசகாயம் நாம் புனிதமாகக் கருதும் பூணூலை அவமதித்து விட்டான். உம்மையும்,
அரசனையும் தூற்றுகிறான்’
என்று இராமையன் தளவாயிடம்
முறையிட்டார்கள்.
ஆத்திரம் கொண்ட
தளவாய் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான். அச்சமயம் பணி.புத்தாரி, தேவசகாயத்திற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில்
வடக்கன்குளத்தில் ஒரு புதிய ஆலயம் கட்டுவதற்குத் தேவையான தேக்குமரம் வெட்டி
முறிப்பதற்கும், ஆரல்வாய்மொழியிலிருந்து
கொண்டு செல்வதற்கும் அரசு அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டு எழுதியிருந்தார். இக்கடிதம்
கிடைக்கப் பெற்றவுடன் தேவசகாயம் இராமையன் தளவாயிடம் சென்று விபரத்தைக்
கூறினார். ஏற்கனவே அந்தணர்கள் கூறிய குற்றச்சாட்டுகளினால் கோபத்திலிருந்த தளவாய்
இத்தருணத்தை பயன்படுத்தி தேவசகாயத்தை கடின வார்த்தைகளால் திட்டி ‘என்னையும், என் தெய்வங்களையும் புறக்கணிக்கும் உன்னையும்
உன் நண்பர்களையும் கழுமரத்தில் ஏற்றுவேன்’ என்றார்.
“அவ்வாறு செய்வதாக
இருந்தால் அவர்களின் ‘தலைவனான’ என்னிடமிருந்தே தொடங்குங்கள்” என பதிலளித்தார் தேவசகாயம். ஆத்திரம் அடைந்த
தளவாய் அவ்விடத்தைவிட்டு அகன்றார். பணி.புத்தாரியின் தேவையை நிறைவேற்ற
முடியவில்லையே என்ற வருத்தத்துடன் வீடு திரும்பினார் தேவசகாயம். கி.பி. 1749-இல் தேவசகாயம் ‘கிறித்துவுக்காக துன்பப்பட தயார்’ என தன் சம்மதத்தை அறிவித்தார்.
அந்தணர்கள்
அரசரிடம் சென்று ‘தேவசகாயம்
உமக்கும், அந்தணர்களுக்கும்
எதிராகப் பேசுகிறார், புராணங்களையும்,
தேவதைகளையும்
இகழ்ச்சியாகப் பேசுகிறார், பத்மனாபசுவாமி
கோவிலை இடித்து தள்ளப் போவதாக சத்தியம் செய்கிறார். அரசரை நாட்டைவிட்டே விரட்டப்போவதாக உறுதி
கூறுகிறார். பூணூலையும் அரைஞாணாக மாற்றி விடுவதாக சபதம் செய்கிறார்,’ என்று பல குற்றங்களைச் சாட்டினார்கள்.
மன்னர்
தேவசகாயத்தைப் பற்றி நல்ல எண்ணம் கொண்டிருந்தமையால் தனது தளவாயான இராமையனிடம்
விபரத்தைக் கேட்டார். இராமையனும் அதை உறுதிப்படுத்த கோபமுற்ற அரசர் தேவசகாயத்தை ‘கைது’ செய்யுமாறு ஆணையிட்டார்.
2. அரச கட்டளையால்
கைதியாக்கப்படல்
கி.பி. 1749 பிப்ரவரி 23-ஆம் நாள் காவலர்கள் தேவசகாயம் தங்கியிருந்த
பத்மனாபபுர குன்றிக்காடு இல்லத்திற்கு சென்று அரசனின் கட்டளையைக் கூறினார்கள்.
தேவசகாயம் தன்
இல்லத்திற்கு அருகில் தங்கியிருந்த டிலனாயிடம் விபரத்தைத் தெரிவிக்க, டிலனாய் காவலர்களை சற்று நேரம் காத்திருக்கச்
சொல்லிவிட்டு தேவசகாயத்தை பத்மனாபபுரம் அருகில் தங்கியிருந்த பணி. பீட்டர் பரேரோஸ்
அவர்களிடம் அழைத்துச் சென்றார். பணி.பீட்டர் பரேரோஸ் டிலனாயின் உதயகிரி புனித
மிக்கேல் சம்மனசானவரின்
ஆலயத்தில் வழிபாட்டுக் குருவாக பணியாற்றிவந்தார்.
கி.பி. 238-ஆம் வருடம் தெயோக்கிளீசியான் மாமன்னரின்
படையில் சேர்ந்த செபஸ்தியார் வாழ்க்கை வரலாற்றை தேவசகாயத்திற்கு எடுத்துக்கூறி
ஒப்புரவு அருட்சாதனத்தையும், முதல்
நற்கருணையையும் பணி. பீட்டர் பரேரோஸ் வழங்கினார்.
காவலர்கள்
தேவசகாயத்தை கைது செய்து அழைத்துச் சென்றனர். தேவசகாயம் கைதாகிச் செல்லும் போது
டிலனாய் மற்றும் அவரது குடும்பத்தினர் உதயகிரி மிக்கேல் சம்மனசானவர் ஆலயத்தில்
அவருக்காக ‘திருமணி ஆராதனை’
செய்தார்கள். கண்ணீர்
சிந்தினார்கள்.
தேவசகாயம்
திருமுழுக்கு பெற்ற நாட்களிலிருந்து வடக்கன்குளத்தில் பணி.புத்தாரி, கோட்டாற்றில் பணி.தாமஸ் டி. பொன்சேகா சே.ச.,
பத்மனாபபுரத்தில்
பணி.பீட்டர் பரேரோஸ் என்பவர்கள் நடத்திய நற்கருணை வழிபாடுகளில் தவறாமல்
பங்கெடுத்தார்.
தேவசகாயத்திற்கு
அரண்மனையிலும், சிறையிலும்
நடந்தவற்றை டிலனாய் ஒரு காவலனின் மூலம் தெரிந்து கொண்டிருந்தார். இதை அறிந்த அரசர்
‘தேவசகாயம் காரியத்தில்
தலையிட வேண்டாம்’ என டிலனாயைக்
கேட்டுக் கொண்டார்.
3. குளுமைக்காடு
தண்டனை
கி.பி 1750 சனவரி 3-ஆம் நாள் திருவிதாங்கூர் நாட்டை
பத்மனாபசுவாமிக்கு மன்னர் மார்த்தாண்ட வர்மா காணிக்கையாக்கினார். இதற்குப் பின்
மார்த்தாண்ட வர்மா முழுமையாக அந்தணர்களின் வசமானார். அந்தணர்கள் இந்த தருணத்தைப்
பயன்படுத்தி மன்னனிடம் தேவசகாயத்தைக் கொல்லும்படி அறிவுறுத்தினர்.
‘தேவசகாயம் மக்களை
மனமாற்றுகிறான். அவன் சிறையில் இருந்தாலும் நமக்கு ஆபத்துதான், இப்படியே விட்டுவிட்டால் கிறித்தவம் நாட்டில்
பரவி ஆட்சியை இழக்கநேரிடும்’ என்றெல்லாம்
பயமுறுத்தினார்கள்.
அரசனும்
பத்மனாபபுரத்திலிருந்து குளுமைக் காட்டிற்குக் கொண்டு சென்று தலைவெட்டிக்
கொல்லுமாறு ஆணையிட்டார். இந்தக் குளுமைக்காடு
புலியூர்க்குறிச்சியிலிருந்து வள்ளியாற்றைக் கடந்து அப்பட்டுவிளைக்கு அருகில்
உள்ளது. குளுமைக்காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட தேவசகாயம் தான் இறக்கும் வரை
தன் அருகில் நிற்கும்படி வேதியர் ஒருவரைக் கேட்டுக் கொண்டார்.
அரசனின் குடும்ப
நண்பர் தேவசகாயத்திற்கு மரணத்தண்டனை விதிக்கப் பட்டதைக் கேள்விப் பட்டு
மார்த்தாண்டவர்மாவின் இல்லத்திற்குச் சென்று எச்சரித்ததால் தேவசகாயத்தைக் கொல்ல வேண்டாம்
என அரசர் உத்தரவிட்டார். இதன் பின்பு தாலுகா அதிகாரிகளின் விசாரணைக்கு
உட்படுத்தப்பட்டார்.
4. தாலுகா
அதிகாரிகளின் தண்டனை
கி.பி. 1737-
இல் மன்னர் மார்த்தாண்ட
வர்மா நிர்வாக வசதிக்காக நாட்டை கல்குளம், அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, சிறையின் கீழ், திருவனந்தபுரம், நெடுமங்காடு என 8 தாலுகாக்களாகப் பிரித்திருந்தார்.
இந்த 8 தாலுகாப் பகுதிகளில் தேவசகாயத்தை எருமை மேல் ஏற்றி
எருக்கம்பூமாலையை அணிவித்து தினமும் 30 அடி அடிக்குமாறு அரசர் ஆணையிட்டார். எருமைமேல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக
கொண்டுவரப்பட்ட தேவசகாயம் புன்முறுவலுடன், ‘இறைவா எனக்கு துணைபுரியும்’ என வேண்டிக்
கொண்டே சென்றார்.
இந்த சமயம்
தேவசகாயத்தை விடுவிக்க வேதியர்கள் இளவரசர் இராம வர்மாவிடம் சென்று முறையிட்டனர்.
இளவரசர் இராம வர்மாவும் தேவசகாயத்தை விடுவிக்குமாறும், கிறித்தவர்கள் தங்கள் மத வாழ்வை சுதந்திரமாக
வாழவும் ஆணை பிறப்பித்தார். ஆனால் மார்த்தாண்ட வர்மா இளவரசரின் ஆணையை
நிராகரித்தார்.
கி.பி. 1750-இல் தாலுகா அதிகாரிகளின் விசாரணை மற்றும்
கொடுமைகள் ஆரம்பமானது. கல்குளம் தாலுகாவில் ஒருமாதம் எருமை ஊர்வலமும், தினமும் உள்ளங்காலில் 30 அடிகள் கொடுப்பதுமான கொடுமைக்கு
உட்படுத்தப்பட்டார்.
அகஸ்தீஸ்வரம்
தாலுகாவில் வெயிலில் கட்டிவைத்து சூரைமுள் கொண்டு உடல்கீற அடிக்கவும், அக்காயங்களில் மிளகுபொடியைத் தேய்க்கவும்
செய்தார்கள். தோவாளை தாலுகாவில் கல்தூணில் கட்டிவைத்து அடித்தார்கள். விளவங்கோடு
வெட்டுவென்னியில் விசாரணைக் கைதியாக இருந்தபோது உப்புநீரை குடிநீராக மாற்றினார்.
இங்கு வத்தல் மிளகுடன் புகையை உண்டாக்கி தேவசாயத்தை நிற்கவைத்து மூச்சுதிணறி
உணர்வு இழக்கும் வரை கொடுமை செய்தார்கள்.
ஆனால் அங்கு அவர்
செபித்துக் கொண்டிருந்தார். இந்த இடத்தில் இவர் நினைவாக ஒரு கல்சிலுவையை வைத்து
மக்கள் புனிதமாகப் போற்றினார்கள். இவ்விடத்தில் தான் இப்போது வெட்டுவென்னி
அந்தோணியார் குருசடி கட்டப்பட்டு, திருத்தலமாய்
காட்சியளிக்கிறது.
5.சிங்கத்தை
அடக்குதல்
கி.பி. 1750
-இல் சூன் மாதத்தில்
நெய்யாற்றின் கரை அதிகாரிகளிடம் கொண்டு சென்றனர். மரப்பேழையில் இரவில் அடைத்து,
கடிக்கும் எறும்புகளை
தூவவும், பகலில் மிளகு
அரைத்து குடிக்கக் கொடுக்கவும் செய்தார்கள்.
நெய்யாற்றின்கரையிலிருந்து
தேவசகாயத்தை நெடுமங்காட்டிற்கு
கொண்டு சென்றார்கள். அந்தப் பாதை காட்டுப்பாதையாக இருந்ததால் திடீரென்று ஒரு
குகையிலிருந்து சிங்கம் ஒன்று சீறிவந்து தேவசகாயம் அமர்ந்திருந்த எருமைமீது
பாய்ந்தது. காவலர்கள் கலங்கினார்கள். தேவசகாயம் சிறிதும் அச்சப்படாமல் சிங்கத்தை
அதட்டி பின்வாங்கச் செய்தார்.
நெடுமங்காடு
அதிகாரி தேவசகாயத்தின் வாயில் கூடையைக்கட்டி மக்களுக்கு போதனை செய்யவிடாமல்
தடுத்தார். சிறையின் கீழ் அதிகாரி அஞ்சுதெங்கு கோட்டையருகில் தேவசகாயத்தைக்
கட்டிவைத்து விட்டு ‘மீன்களுக்கு
இரையாக ஒரு மனிதனைத் தருகிறோம்’ என்று கிறித்தவர்கள்
வாழும் பகுதிகளுக்குச் சென்று முரசடித்து அறிவிக்கச் செய்தார்.
6. பேயை அடக்குதல்
கி.பி. 1750 செப்டம்பர் மாதம் வேதசகாயத்தை திருவனந்தபுரம்
தாலுகா அதிகாரிகளிடம் கொண்டு சென்றார்கள். அங்கு தேவசகாயத்தை ஒரு பூவரசு
மரத்தடியில் கட்டி வைத்திருந்தார்கள். நெடுநாள் கழித்து ஞானப்பூ தன் கணவரைப்
பார்க்க அங்கு வந்தார்.
இருவரும்
இறைவேண்டல் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது பொல்லாத பேய் ஒன்று அவர்களுக்கு
முன்னால் தோன்றி ‘மனைவிக்காகவாவது
நீ திரும்பவும் மதம் மாற வேண்டும்’ என்றெல்லாம்
ஆசைக்காட்டியது.
ஆனால் தேவசகாயம்
மன உறுதியோடு கரம்குவித்து தியானித்து அலகையின் ஆசையை நிராகரித்து அதனை வெற்றி
கொண்டார். இந்நேரத்தில் வானதூதர் அவர்களுக்கு முன்பாகத் தோன்றி இறைவனின் சித்தத்தை
நிறைவேற்ற ஆயத்தமாக இருக்குமாறு அறிவுறுத்தி ஆசீர்வதித்தார்.
கி.பி.1750 அக்டோபர் மாதம் தேவசகாயம் திருவனந்தபுரத்திலிருந்து
தலைநகர் பத்மனாபபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். இங்கு மிகப்பெரிய
சுண்ணாம்புச் சூளை உருவாக்கி அதில் தேவசகாயத்தை நிறுத்தினார்கள்.
பலமணிநேரம்
கழித்து தேவசகாயம் இறந்திருப்பார் என நினைத்துத் தேடினர். அங்கே முழந்தாளிட்டு
இறைவனைப் புகழ்ந்து நின்றார் தேவசகாயம். இதற்குப் பின் மீண்டும் அவரை
திருவிதாங்கோடு சிறையில் அடைத்தனர்.
திருவிதாங்கோடு
சிறையில் தேவசகாயம் படும் துன்பங்களைக் கேட்டு, நோய்வாய்ப்பட்டு படுக்கை யானார் ஞானப்பூவின்
தந்தை. தேவசகாயம் அவருக்காக செபிக்க அதே நேரம் நோய் நீங்கி நலமடைந்தார். அவரும்,
ஞானப்பூவின் தாயாரும்
அன்று முதல் கிறித்துவை ஏற்றுக் கொண்டார்கள்.
தாலுகா
அதிகாரிகளின் விசாரணை முடிந்தபிறகு தேவசாயத்தை தூக்கிலிட பெருவிளையில் உள்ள
ஆராச்சாரிடம் ஒப்படைக்குமாறு அரசர் கட்டளையிட்டார். இந்த ஆராச்சார் தான்
திருவிதாங்கோட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகளுக்குத் தண்டனையை
நிறைவேற்றுபவர்.
7.பெருவிளை
சிறையில்
கி.பி. 1750 டிசம்பரில் பெருவிளைக்கு தேவசகாயத்தை கொண்டு
சென்றனர். பெருவிளை நாகர்கோவில் திருவனந்தபுரம் சாலையில் பார்வதிபுரம்
சந்திப்பிலிருந்து 1 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ளது.
பெருவிளைக்குக்
கொண்டு செல்லும் வழியில் புலியூர்க்குறிச்சி பாறையில் தேவசாகயத்தை மதிய வெயிலில்
உட்காரவைத்தனர். இந்த இடம் தக்கலையைத் தாண்டிவரும் பாதையில் உள்ளது.
தேவசகாயத்திற்கு தாங்கமுடியாத தாகம் எடுத்தது. காவலர்களிடம் தண்ணீர் கேட்டார்.
காவலர்கள் தாமதித்து புதரினுள் கிடந்த ஒரு உடைந்த சட்டியில் மட்கிப்போன
சருகுகளுடன் கிடந்த தண்ணீரைக் குடிக்கக் கொடுத்தனர்.
அதைப்பருகிய
பின்னரும் அவருக்குத் தாகம் தீர்ந்தபாடில்லை. மீண்டும் தண்ணீர் கேட்டார். அவர்கள்
மறுக்கவே இறைவனிடம் வேண்டி தன் கை முட்டால் பாறையின் மேல் ஓங்கி அடித்தார்.
அதிசயம் அரங்கேறியது. வற்றாத நீர் ஊற்று உண்டாயிற்று. தண்ணீர் பொங்கி
வழிந்தோடியது. தாகம் தீர பருகினார்.
இதைக்கண்ட காவலர்கள் பயத்துடன் அவரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.
பெருவிளையில்
ஆராச்சார் தன் வீட்டு மாட்டுத் தொழுவத்திற்கு அடுத்து நின்ற ஒரு பட்ட வேப்ப
மரத்தில் தேவசகாயத்தைக் கட்டி வைத்தார். இங்கு வெயிலும் மழையும் அவரை பதம்
பார்த்தன.
மக்கள் அவரை
சந்திக்கக் கூட்டம் கூட்டமாக வந்தனர். வாழைப்பழங்கள், அரிசி, திணையரிசி, சாமையரிசி
இவற்றால் செய்த மாவுவகைகள், உணவுகள், துணிகள், நாணயங்கள் போன்ற வற்றைக் காணிக்கையாகக்
கொடுத்தனர். அவற்றை தேவசகாயம் தன்னைக் காணவந்த ஏழை எளிய மக்களுக்கும், காவலர்களுக்கும் கொடுத்தார்.
மக்கள் இவரை
சித்தர், ஞானி, மகான், தெய்வ அருள் பெற்றவர் எனப்புகழ்ந்தனர். மக்கள் பல புதுமைகளைப் பெற்றனர்.
இதைக்கண்ட ஆராச்சாரும் அவரது மனைவியும் குழந்தைப்பேறு கிடைக்க தேவசகாயத்திடம்
முறையிட்டார்கள்.
தேவசகாயம்
அவர்களுக்காக செபிக்க குழந்தைவரம் கிடைக்கப் பெற்றார்கள். அன்று முதல்
ஆராச்சாருக்கு அவர்மேல் கனிவு ஏற்பட்டது. அவரைக் கட்டி வைத்திருந்த மாட்டுத்
தொழுவத்திலிருந்து கூரையால் வேயப்பட்ட குடிசை வீட்டிற்கு மாற்றினார்கள்.
இவருக்கு
பெருவிளையில் பத்மனாபபுரம் பங்குப்பணியாளர் பணி.பீட்டர் பரேரோஸ் என்பவர் இருமுறை
நற்கருணை வழங்கினார். கோட்டாறு பங்குப்பணியாளர் தாமஸ்.டி.பொன்சேகா சே.ச. ஒப்புரவு
அருட்சாதனம் வழங்கினார்.
8. திருக்குடும்பக்காட்சி
கி.பி.1751-லிருந்து பணி.பிரான்சிஸ்கு கிளமென்ட்
தொம்மாசினி என்பவர் பணி. புத்தாரிக்குப் பதிலாக வடக்கன்குளத்தில் பணியாற்றிக்
கொண்டிருந்தார். ஒரு நாள் தேவசகாயம் பெருவிளையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது
திருக்குடும்பக் காட்சி கண்டார்.
உடனே தன்
பக்கத்தில் படுத்திருந்த இளைஞனை எழுப்பி அதைப்பற்றிக்கேட்டார். இளைஞனால் ஒரு ஒளியை
மட்டுமே காணமுடிந்தது. மறுநாள் தான் கண்ட காட்சி திருக்குடும்பக்காட்சி என்பதை
வடக்கன்குளம் பணியாளரிடமிருந்து தெரிந்து கொண்டார்.
இங்கு காவலர்கள்
இவரைக் கொல்ல உணவில் நஞ்சு வைத்தனர். இதை அறிந்த ஆராச்சார் தப்பிக்கும்படி
தேவசகாயத்தைக் கேட்டுக் கொண்டார். ஆனால் தேவசாகயம் மறுத்துவிட்டார். மறைசாட்சியாய்
இறப்பதை மகிமையாகக் கருதினார்.
நஞ்சு கலந்த உணவு
இவரைத் தீண்டவில்லை. பெருவிளையில் தனக்கு நடந்ததையெல்லாம் கடிதம் மூலம் தன்
நண்பர் டிலனாய்க்கு தெரிவித்துக் கொண்டே இருந்தார். பின்னர் இங்கிருந்து
இராமன்புதூர் சிறைக்கு மாற்றினார்கள்.
9. இராமன்புதூர்
சிறையில்
கி.பி. 1751 சூன் முதல் ஆகஸ்டு முடிய இராமன்புதூர் பஞ்சவன்
காட்டுப்பகுதியில் உள்ள தளவாய்புரம் என்ற பகுதியில் இருந்த சிறையில் தேவசகாயத்தை
அடைத்தார்கள். இங்கு பணி.தாமஸ்.டி.பொன்சேகா அவருக்கு பாவசங்கீர்த்தனம் கேட்டு
நற்கருணை வழங்கினார்.
சிறையில்
தேவசகாயத்தைப் பார்க்க வந்த பணி. ஆர்.எப்.பிமாண்டல் சே.ச. அவர்கள் தேவசகாயத்துடன்
நீண்டநேரம் உரையாடினார். தேவசகாயத்தின் ஆத்ம நிலையும், இறை உணர்வும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.
தேவசகாயததின் வாழ்வில் இறைவனின் ஞான ஒளி என்றும் நிலை கொள்ள வேண்டிக் கொண்டு
தேவசகாயத்தை ஆசீர்வதித்தார்.
தேவசகாயத்தின்
கைகால்களில் கட்டப் பட்டிருந்த விலங்கு
சங்கிலிகளை தன்கையில் எடுத்து முத்தமிட்டார். பின்னர் “ஒரு புனிதத் திருமகனின்
வேதசாட்சிய வாழ்வை நேரில் பார்க்கும் பாக்கியம் தந்த ஆண்டவருக்கு நன்றி
உரித்தாகுக. இந்த அருமையான விலங்குகள் கூடிய சீக்கிரம் விண்ணகத்தின் மகிமைக்குரிய
இரத்தினக் கம்பளமாக மாறும்!” என்று
வாழ்த்தினார்.
கி.பி.1751 நவம்பர் 15-ஆம் நாள் தேவசகாயத்தை இராமன்புதூர்
சிறையிலிருந்து தெற்கு எல்லையான தோவாளைக்குக் கொண்டு வந்தனர். தோவாளையில் இராணி
மங்கம்மாள் சத்திரத்தில் ஓய்வு எடுத்தார்.
தேவசகாயத்தின்
நற்குணங்களையும், அதிசயத்தையும்
அறிந்த சுற்றுவட்டார மக்கள் அவரைப் பார்க்க அலைஅலையாய் திரண்டனர். காவலர்கள் சில
நேரங்களில் மக்களைத் தடுத்தார்கள். பலநேரங்களில் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள்.
தன்னைத் தேடிவந்த மக்களுக்கு இறைவனைப்பற்றிய போதனையைக் கூறிக்கொண்டேயிருந்தார்
தேவசகாயம்.
பாகம் V . தூக்கி வீசப்பட்ட மலர்
1. கோட்டைவாசல்
சிறையில் கி.பி.1751 நவம்பர் 16-இல் தேவசகாயத்தை ஆரல்வாய்மொழிக்குக்
கொண்டுவந்து சுங்கச்சாவடிக்கு அருகிலுள்ள ஒரு பூவரசு மரத்தில் கட்டி வைத்தார்கள்.
தேவசகாயம் ஆரல்வாய்மொழிக் கோட்டைவாசல் சிறையில் நோய்வாய்ப்பட்டார். சிறைக்காவலர்கள்
அவருக்கு மருத்துவம் செய்தனர். அவர்
நன்றியோடு அதை மறுத்தார். தினமும் பல மணிநேரம் செபம் செய்தார். இங்கு மகோதர நோயால்
பாதிக்கப்பட்ட பெண்ணைக் குணப்படுத்தினார்.
ஒரு நாள்
ஆட்டிடையர்கள் தங்கள் ஆடு இறந்து விட்டதாக தேவசகாயத்திடம் வந்து முறையிட்டார்கள்.
தேவசகாயம் இறைவேண்டல் செய்து இறந்த ஆட்டிற்கு உயிர்கொடுத்தார்.
ஆட்டிடையர்கள் கண்ணீரோடு நன்றி செலுத்தினர். அங்கு வந்த ஊமைப்பெண்ணை பேசவைத்தார்.
குழந்தை இல்லாத பெண்ணுக்குக் குழந்தைச் செல்வம் கிடைக்கச் செய்தார்.
கி.பி. 1752-இல் மக்கள் பெருமளவில் திருமறையைத்
தழுவியதாலும், தேவசகாயத்தை மதம்
மாற்ற முடியவில்லை என்பதாலும் தேவசகாயத்தை ஆரல்வாய்மொழியில் ஆள்நடமாட்டம் இல்லாத
இடத்தில் வைத்து சுட்டுக்கொன்றுவிட எதிரிகள் தீர்மானித்தனர்.
கி.பி.1752 சனவரி 6-ஆம் நாள் ‘தன் வாழ்வு முடியப்போகிறது’ என்று தன் மனைவியிடம் தெரிவித்து தான் இறந்த
பிறகு வடக்கன்குளத்திற்குச் சென்று வாழுமாறும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த
சந்திப்பு தேவசகாயம் இறப்பதற்கு 8 நாட்களுக்கு
முன்பு ஆரல்வாய்மொழியில் நடந்தது.
இச்சமயம்
டிலனாயும், அவரது
குடும்பத்தாரும் தேவசகாயத்தை சந்தித்து ஆறுதல் கூறி இயேசுவின் திருப்பாடுகளை
தியானித்தார்கள். அவ்வேளையில் அங்கு வந்த வடக்கன்குளம் பங்குப்பணியாளரான
பணி.பிரான்சிஸ்கு கிளமெண்ட் தொம்மாசினி தேவசகாயத்திற்கு ஒப்புரவும் நற்கருணையும்
வழங்கினார். அவருடன்
தேவசகாயத்தின் ஞானத் தகப்பனாகிய ஞானப்பிரகாசமும் இருந்தார். தேவசகாயம்
சிறைவாழ்வின்போது மூன்றாண்டுகள் குளிக்காமலும்,
தலையில் எண்ணெய்
தேய்க்காமலும் இருந்தாலும் இவரின் உடல் சுத்தமாகக் காணப்பட்டது.
2. காற்றாடிமலையில்
கடைசி நேரம்
கி.பி. 1752 சனவரி 14-ஆம் நாள் மனக்கலக்கத்திலும் செப உணர்விலும்
காணப் பட்ட தேவசகாயத்தை காவலர்கள் எழுப்பினார்கள். ஆரல்வாய்மொழி காற்றாடி
மலைக்குச் சுட்டுக் கொல்வதற்காக அழைத்துச் சென்றார்கள். இந்தக் காற்றாடிமலை
ஆரல்வாய்மொழி சுங்கச் சாவடியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் காட்டிற்குள் உள்ள ஒரு மலைப்பகுதியாகும்.
தேவசகாயம் தனக்கு
வரப்போகும் மரணத்தை ஒரு காட்சியின் வழியாக முன்கூட்டியே அறிந்திருந்ததால்
அவர்களுடன் தயக்கமில்லாமல் சென்றார். வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் மகிமைக்காகவும்,
சனிக்கிழமைகளில் மாதாவின்
துணைக்காகவும் ஒருசந்தி இருந்ததால் அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை.
எப்படியாவது
சீக்கிரம் கொன்றுவிட வேண்டும் என்று எண்ணிய
காவலர்கள் ஒரு கிராத்தடியில் தலைகீழாகத் தொங்கும் நிலையில் அவரை மலைமேல் தூக்கிச்
சென்றனர். சுட்டுக்கொல்லப்பட வேண்டிய இடத்தை அடைந்ததும் காவலர்களிடம் இறைவனிடம்
செபிப்பதற்காக அனுமதிகேட்டு தன்னுடன் இருந்த அனைவருக்காகவும் செபித்தார். அவர்
செபித்த இடத்தில் அவரின் கைமுட்டும், கால்முட்டும் பதிந்திருந்தன.
செபம் முடித்த
தேவசகாயத்தின் பக்ககத்தில் துப்பாக்கிகளுடன் நின்று கொண்டிருந்த மூன்று வீரர்கள்
முன்னோக்கி வந்து சுட்டார்கள். மூன்றுக் குண்டுகளும் ஒரே நேரத்தில் அவர் உடலில்
பாய்ந்தன.
“இயேசுவே! என்னை
இரட்சியும்! உலக மாதாவே! என் மரியன்னையே! எனக்கு துணையாக வாரும்” என்று கூறிக்கொண்டு பாறையிலிருந்து கீழே
விழுந்தார். இன்னும் அவர் இறக்கவில்லை என்பதை உணர்ந்த காவலர்கள் இரண்டாம்
முறையாகச் சுட்டனர். ஒரு துப்பாக்கிக் குண்டு
குறி தவறிப்போனது. இரு குண்டுகளும் அவர்மேல் பாய்ந்தன. அவர் ‘இயேசுவே! என் மரியன்னையே’ என்று சத்தமாகக் கூப்பிட்டு தரையில்
சாய்ந்தார்.
பாகம் VI விதையான மலர்
கி.பி. 1752-ஆம் ஆண்டு சனவரி மாதம் 14-ஆம் நாள் இயேசுவைப் போன்று 5 காய மகிமையோடு வேதசாட்சியாக தேவசகாயம்
இறந்தார். தேவசகாயத்தின் உயிர் பிரிந்தபோது காற்றாடிமலையின் பாறைகள் இரண்டாகப்
பிளந்து வெண்கல மணியோசை எழுப்பி தேவசகாயத்திற்கு துக்கமணி அடித்தது.
தேவசகாயத்திற்காகக்
கண்ணீர் வடித்த ‘கண்ணீர்ப்பாறையும்’
தணிந்த குரலில் அழுத ‘ஊமைப் பாறைகளும்’ இங்கு உள்ளன. இப்போது இந்த பாறைகளில் வானோக்கி
நிற்கும் இயேசுவின் 20 அடி சுரூபமும்,
அன்னை மரியின் சுரூபமும்
சிலுவைப் பாதை நிலைகளும் உள்ளன.
தேவசகாயத்தின்
உடல் கிடந்த இடத்தில் உள்ள ஆலமரம் அவருக்கு நிழல்தந்து தனது கிளையின்
தனித்தன்மையைப் பெற்றது. தேவசகாயத்தின் மரணச் செய்தியைக் கேள்விப்பட்டு கொச்சி
ஆயர் கிளமென்ட் ஜோசப் தெதேயும் என்ற நன்றிப்பாடலைப் பாடி திருப்பலி
நிறைவேற்றினார்.
கி.பி. 1758-இல் மரணமடைந்த மன்னர் மார்த்தாண்ட வர்மா ‘கொலைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களின் உடல்களை
வேறு இடத்திற்கு கொண்டு செல்ல அனுமதி இல்லை’ என அறிவித்திருந்தார். இதனால் தேவசகாயத்தின்
உடலை அடக்கம் செய்ய முடியவில்லை.
‘பொதிமாடு’
வியாபாரம் செய்யும்
கிறித்தவர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தின் எலும்புகளைக் கண்டெடுத்துக் கோட்டாறு
பங்குப்பணியாளர் தாமஸ்.டி.பொன்சேகா.சே.ச.விடம் ஒப்படைத்தார்கள். பின்பு இவர்
கோட்டாறு தூய பிரான்சீசு சவேரியார் பேராலயத்தின் பெரிய பீடத்தின் முன்பக்கம் தேவசகாயத்தை
அடக்கம் செய்தார். பணி. புத்தாரி தேவசகாயம் இறந்த செய்தியை இத்தாலி நாட்டிலுள்ள
தனது தங்கைக்கு கி.பி.1753 ஆகஸ்ட் 7-ஆம் நாள் எழுதிய கடிதத்தில்
குறிப்பிட்டிருந்தார்.
1. ஞானப்பூவின்
மரணம்
கி.பி. 1757-ஆம் ஆண்டு மே மாதம் 19-ஆம் நாள் வியாழக்கிழமை பணி. புத்தாரி மரண
மடைந்தார். அவரது கல்லறை ஆவூரில் உள்ளது. இந்தக் கல்லறையின் மேல் நாலுகால் மண்டபம்
ஒன்றை தேவசகாயத்தின் மனைவி ‘ஞானப்பூ’ அமைத்தார்.
தேவசகாயத்தின்
மரணத்திற்குப் பின் அவர் துணைவியார் ‘ஞானப்பூ’ தனது தாயாருடன்
வடக்கன்குளத்திற்குச் சென்றார். அங்கே பதினான்கு ஆண்டுகள் கிறிஸ்துவுக்காக
வாழ்ந்து அங்கேயே மரணம் அடைந்தார். வடக்கன்குளம்
மாதாக்கோவிலின் இடது பக்கம் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
2. நினைவுப்பொருட்கள்
கி.பி. 1756-இல் மாவேலிக்கரையில் இராமையன் தளவாய் பெரியம்மை
என்ற வைசூரி நோயால் பலியானார். ஆயர் பிரான்சிஸ் திபூர்சியஸ் ரோக் என்பவர்
தேவசகாயம் கட்டப்பட்டிருந்த சங்கிலியை
உரோமைக்கு எடுத்துச் செல்லும்போது தவறவிட்டார். இவர் தூத்துக்குடி மறைமாவட்டத்தைச்
சார்ந்தவர்.
தேவசகாயம்
அணிந்திருந்த தலைப்பாகை வடக்கன்குளம் ஆலயத்திலும், அவர் பயன்படுத்திய நீண்டவாளும், நுனியில் கூரிய கத்திப் பொருத்தப்பட்ட கம்பும்
நட்டாலத்தில் இவர் நினைவாகக் கட்டப்பட்ட ஆலயத்திலும் உள்ளன. தேவசகாயத்தின் நினைவாக
மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ‘சகாயம்’,
‘தேவசகாயம்’, ‘ஞானப்பூ’ என பெயர்சூட்டி மகிழ்கின்றனர்.
3. டிலனாயின் மரணம்
கி.பி. 1777-ஆம் ஆண்டு சூன் மாதம் முதல்நாள் டிலனாய்
இறந்தார். இவரைத் தக்கலை அருகிலுள்ள உதயகிரிக்கோட்டையின் உள்ளிருக்கும் ஆலயத்தின்
நடுவில் நல்லடக்கம் செய்தனர். குமாரக்கோவில் மண்டபத்தில் இவரது உருவம் கல்தூணில்
பொறிக்கப்பட்டுள்ளது. டிலனாயின் மகன் கி.பி.1777 மற்றும் அவரது மனைவி கி.பி.1783-ஆம் ஆண்டிலும் இறந்தார்கள்.
பாகம் VII. புனிதமான மலர்
கி.பி. 1756 நவம்பர் 15-ஆம் நாள் கொச்சி ஆயர் மேதகு கிளமென்ட் ஜோசப்.
சே.சே அவர்கள் திருத்தந்தை 14-ஆம்
பெனடிக்டுக்குக் கொடுத்த ஐந்தாண்டு அறிக்கையில் தேவசகாயத்தின் வீரமரணம் பற்றிக்
குறிப்பிட்டிருந்தார்.
கோட்டாறு
மறைமாவட்டத்தில் கத்தோலிக்க சங்கம் என்ற அமைப்பைச் சார்ந்த பொது நிலையினர் 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் நாள் ஒன்று கூடி தேவசகாயம் புனிதராக்கப்பட
வேண்டும் என்ற முயற்சி மேற்கொண்டனர்.
1993-ஆம் ஆண்டு சனவரி
முதல் நாள் கோட்டாறு ஆயர் லியோன் அ. தர்மராஜ் அவர்களால் புனிதர்பட்ட
வேண்டுகையாளராக நியமிக்கப்பட்டார்.
புனிதர் பட்டக்
குழுவின் பரிந்துரையால் பணி. நற்சீசன் அவர்கள் வரலாற்று ஆவணம் ஒன்றைத் தொகுத்து 2003-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் புத்தகமாக வெளியிட்டார்.
உரோமையில்
புனிதர்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட பணி. ஜார்ஜ் நெடுங்காட் சே.ச. அவர்கள்
வேண்டுகையாளராக 2003-ஆம் ஆண்டு
நவம்பர் 14-ஆம் நாள்
நியமிக்கப்பட்டார். பணி. கபிரியேல் துணை வேண்டுகையாளரானார்.
உரோமை
வேண்டுகையாளர் பணி. ஜார்ஜ் நெடுங்காட் சே.ச 2004-ஆம் ஆண்டு சூலை மாதம் கோட்டாறு
மறைமாவட்டத்துக்கு வருகை தந்து தேவசகாயம் தொடர்புடைய இடங்களைப் பார்வையிட்டார்.
அப்போதே வரலாற்றுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டு 13.09.2004 முதல் 28.10.2005 வரை பல இடங்களுக்கு சென்று ஆய்வுப்பயணம்
மேற்கொள்ளப்பட்டது.
2006-ஆம் ஆண்டு மார்ச்
03-ஆம் நாள் மறைமாவட்ட
விசாரணைமன்றம் உருவாக்கப்பட்டு 109 சாட்சிகள்
விசாரிக்கப்பட்டு அறிக்கை கொடுக்கப்பட்டது.
2006-ஆம் ஆண்டு
டிசம்பர் மாதம் 03-ஆம் நாள்
கோட்டாறு சவேரியார் திருநாளில் ‘மறைசாட்சி
தேவசகாயம்பிள்ளை’ என்ற மும்மாத
இதழ் தொடங்கப்பட்டது
புனிதர்
பட்டத்திற்கான மறைமாவட்ட அளவிலான எல்லா தயாரிப்புகளும் நிறைவு பெற்ற நிலையில் 2008
- ஆம் ஆண்டு செப்டம்பர் 07-ஆம் நாளில் கோட்டாறு தூய சவேரியார்
பேராலயத்தில் மறைமாவட்ட விசாரணை நிறைவு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆவணங்கள்
அனைத்தும் திருத்தந்தையின் இந்தியப் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப்பட்டு உரோமைப்
புனிதர்பட்டப் பேராயத்திற்கு அனுப்பப்பட்டது.
18.03.2010-இல் உரோமைப்
பேராயத் தலைவர் ஆவணங்களை ஏற்றுக் கொண்டதற்கான கடிதம் கிடைத்தது. தொடர்ந்து பணி.
சாண் குழந்தை அவர்களை வெளி ஒத்துழைப்பாளராக 17.07.2010 அன்று உரோமைப்
பேராயம் நியமித்து மிக வேகமாக புனிதர் பட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
மக்கள் மனதில்
நீங்கா இடம் பிடிந்திருக்கும் இறை ஊழியர் தேவசகாயம் வேதசாட்சி என அகில உலகத் திரு
அவை அறிவிக்கும் நாள் அருகில் உள்ளதை நினைத்து உள பூரிப்போடு இறை வேண்டல்
செய்வோம்.
காற்றாடி மலைக்
கதிரவனில் ஒளிக்கீற்றுகள் உலகிலுள்ள அனைவருக்கும் நன்மைகள் விளைவிக்க
வழிகாட்டட்டும்.












0 comments:
Dí lo que piensas...