Sunday, November 18, 2012

18-04-2010
நாகர்கோவில்

அன்புள்ள மாமாவுக்கு,

உங்கள் அன்பை என்றும் மறவாத தேன்மொழி எழுதுவது,
உங்கள் கடிதம் கிடைத்தது. நீங்கள் சொன்னது போல் நான் நடனப் பயிற்சி வகுப்பில் தம்பியுடன் சேர்ந்துள்ளேன். உங்கள்
நலம் அறிந்ததில் மகிழ்ச்சி.
இறை ஊழியர் தேவசகாயத்தின் பண்புகளைப் பற்றி
விரிவாக தெரிந்து கொண்டேன். அனைவரிடமும் அன்பாக
பழகும் அவரது பாங்கு என்னைக் கவர்ந்தது. இன்னும் அவரைப்
பற்றி மிகுதியாக அறிந்து கொள்ள ஆசை. அவரின் செபங்களைப்
பற்றி விரிவாகச் சொல்ல முடியுமா? நீங்கள் வரிசைப்படுத்தி
எழுதியிருப்பது எனக்கு படிப்பதற்கு மிகவும் உதவியாக
இருக்கிறது. நாங்கள் மே 13-ஆம் நாள் கொடைக்கானலுக்கு
சுற்றுலா செல்கிறோம்.
பதில் கடிதத்திற்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் 6 நம்பிக்கை வளர்த்த செபங்கள்

05-05-2010
பெங்களூர்

பாசமிகு தேன்மொழிக்கு,

பாசமிகு மாமா எழுதுவது, நான் இங்கு நலமாக
இருக்கிறேன். நீங்கள் உயிர்ப்புப் பெருநாளை நன்றாகக்
கொண்டாடியிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஆலயத்தில் ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் இருந்ததா? இரவுத் திருப்ப-க்கு
சென்றீர்களா? இது குறித்து ஒன்றும் பகிர்ந்து கொள்ளவில்லை.
எனவே அடுத்தக் கடிதத்தில் எழுதவும். கொடைக்கானலுக்கு
பத்திரமாக சென்று வரவும்.
செபங்கள் தான் தேவசகாயத்தின் உயர்ந்த ஆயுதம். அவர்
எப்பொழுதும் செபிக்க மறந்ததில்லை. தனிமையிலும் மக்களுடனும்
சேர்ந்து இறைவனிடம் செபித்தார். நல்வரங்கள் பல பெற்றார்.
செபங்கள் இறைமனித உறவின் பாலம். கடவுளின் கருணை
அருவியில் நீந்த உதவும் தெப்பங்கள். இறைவன் மீது இம்மியளவும்
விசுவாசம் குன்றாத புனிதர்களின் அடையாளம் இந்த செபங்கள்.
வாழ்வில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் அடித்தளம் இந்த
செபங்கள். செபம் செம்மையானப் பாதைகளையும், -மைக்
குன்றாத தன்னம்பிக்கையையும் வகுத்துத் தருகிறது.
இறை ஊழியர் தேவசகாயம் இந்த ஓர் ஆயுதத்தை
ஆணித்தரமாக உபயோகப்படுத்தி உயர் சக்தியைப் பெற்றவர். அவர்
செய்த புதுமைகளின் தொடக்கமாக இந்த செபங்கள் அமைந்ததை
நாம் காண முடியும். இன்பத்திலும் இறைவனை ஆராதித்தார்.
துன்பத்திலும் இறைவனின் துணையைக் கேட்டார். மன்னிக்க
மன்றாடினார். ஞானத்திற்காகவும், நல்ல மனதிற்காகவும் வேண்டினார்.
இரவிலும் இறைவனுடன் மெய்மறந்த நிலையில் இருப்பார்.
பக-லும் பகலவன் ஒளியைப் போன்ற பிரகாச முகத்துடன்
திருக்குடும்பத்தைத் தியானித்தார். அச்சமற்று அனைவரின்
முன்னிலையிலும் முழுமுதற் தலைவனைத் தரிசித்தார். அரசனுக்காக,
அடிமைகளுக்காக, ஆதரவற்றவர்களுக்காக, நாட்டுக்காக உருக்கமாக
வேண்டினார்.
ஆழ்ந்த செபமும், தியானமும் தன்னுடன் இருந்தக்
காவலர்களைக் கோபப்படுத்தியது. மாமன்னர் மார்த்தாண்ட
வர்மாவைக் காயப்படுத்தியது. ஏனென்றால் இவர்கள் கொடுத்த
துன்பங்கள் அனைத்தும் இவரின் செபத்தின் முன்னால் மண்டியிட்டன.
பெற்றுக்கொண்ட அனைத்திற்காகவும் நன்றி கூற அவர்
மறந்ததில்லை. செபத்துடன் கலந்த நன்றி கூறல்களும் இவரின்
இறைவேண்டலில் முக்கிய அங்கத்தைப் பெற்றன.
துன்பங்களின் தொடக்கம் முதல் துப்பாக்கியால் சுடப்படும்
வரைத் தன்னுடன் இருந்தவர்களுக்காக தன் இறுதிப் பயணத்தில்
செபித்தார். மனம்மாறி திருமறை தழுவியவர்களுக்காகவும் செபித்தார்.
ஆசிரியர்களுக்காகவும், தனக்கு திருவருட்சாதனங்களை வழங்கிய
அருட்பணியாளர்களுக்காகவும் செபித்தார். தனது மனைவிக்காகவும்
செபித்தார்.

இவருடைய செபமே இவருடைய உன்னத நிலைக்கு
அடித்தளமாக இருந்தது. இறைமகன் இயேசு தனது பாடுகளுக்கான
வல்லமையை தனது செபத்தின் மூலமாகப் பெற்றுக் கொண்டவர்.
அவரைப் போல இவரும் தனது செபத்தின் மூலமாகவே அவனியை
ஆட்கொள்ளும் வல்லமையைப் பெற்றார். தனக்கு வரப்போகும்
பாடுகளைத் தாங்கும் சக்தியையும், இறைவனை மறுத-க்காத
மனநிலையையும் இவர் கேட்டு பெற்றுக் கொண்டார்.
பட்டு சாமரங்களுக்குள்ளே
பஞ்சுமெத்தை தலையணையில் கால்பதித்து
இவர் செபிக்கவில்லை.
கரடுமுரடான பாதைகளில்
கடும் வெயில் பாறையின் மேல் செபித்தார்.
பூமுகங்களும், தேன்முகங்களும்,
கூடும் நீர்வீச்சின் நிலவொளியில்
இறைவனைத் தேடவில்லை.
கொடிய சிறைகளிலும்,
கடுமையானத் தண்டனைகளுக்கிடையேயும்
இறைவனைத் தேடினார்.
துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் பொறுமையும், குன்றாத
மனவுறுதியும் இறைவன் மட்டுமே தரமுடியும் என்றறிந்து அவரிடமும்
இறையன்னையிடமும் இடைவிடாமல் வேண்டினார்.
புனிதர்களுடைய வரலாறுகளை வாசித்து, மறைசாட்சியர் அடைந்த
விண்ணக மாட்சியை சிந்தித்தார். இறைவனின் பாடுகளை நினைத்து
கடுந்தவம் மேற்கொண்டார். வெள்ளிக்கிழமைதோறும் இயேசுவின்
பாடுகளையும், சனிக்கிழமைதோறும் புனித கன்னிமரியையும் பற்றி
தியானித்து ஒருசந்தி கடைபிடித்தார். தான் மறைசாட்சியாக
கொல்லப்படுவதற்கு முந்தைய தவக்காலம் முழுவதும் சிறிதளவு
உணவு மட்டுமே உண்டு வந்தார். இவரைக் கொல்ல காலம் தாழ்த்த
இவர் அதிகமாக செபித்தார்.

கண்களில் வழிந்த நீருடன் வார்த்தையான இறைவனை
ஆராதனை செய்தார். காயங்களின் -களில் கூட வானக
இறைவனைப் புகழ்ந்தார். ஊர்கள்தோறும் கால்நடையாகக் கூட்டிச்
செல்லும் போதும் ஒளியாம் இறைவனை வணங்கினார். பலர் கூடி
இகழ்ந்தாலும் மலர்தூவி இறைபுகழ் பாடினார்.
சிறையில் அவர்
வசந்தத்தை உணர்ந்திருக்க முடியாது -- ஆனால்
வாழ்வு தரும் வார்த்தையை தியானிக்க முடிந்தது.
ஆடம்பரத்தையும், அன்பையும் உணர்ந்திருக்க முடியாது -- ஆனால்
அன்பர் இயேசுவின் அரவணைப்பில் செபிக்க முடிந்தது.
இவர் செபித்த தருணங்களையும், செபத்தையும் இங்கே
வரிசைப்படுத்துகிறேன். உனக்கு உதவியாக இருக்கும் என்று
நம்புகிறேன்.
i) பாடுகளில்
இறை ஊழியர் தேவசகாயத்தை கைது செய்யும் மன்னரின்
ஆணையை நிறைவேற்ற வந்த காவலர்கள் முன்னிலையில், ""என்
ஆண்டவரே! என் தேவனே! எனக்கு அமைதி அருளும்'' என
வேண்டிக் கொண்டார்.
அவமானப் பவனியின் போது இடுப்பைச் சுற்றி ஒரு சிறிய
துணி அணிந்து, எருக்கு மாலை கழுத்தில் தொங்க இரு கைகளும்
பின்புறம் கட்டப்பட்டு எருமைமேல் பின்பக்கம் நோக்கி
அமர்த்தப்பட்டு ஊர்கள்தோறும் பவனியாக கொண்டு வரப்பட்டபோது
அவர் "உதடுகளில் நிரந்தரமான புன்முறுவல் மலர வழியில்
வந்தவர்களை வணங்கியவாறு இறைவா எனக்குத் துணைபுரியும்'
என்று செபித்துக் கொண்டேயிருந்தார்.
பணி. புத்தாரி ஆலயம் கட்டுவதற்காக மரங்கள்
வேண்டுமென்று இறை ஊழியர் தேவசகாயத்திற்கு கடிதம் எழுதினார்.
இக்கடிதத்தின் தொடர்பாக அமைச்சர் இராமைய்யன் தளவாயிடம்
அனுமதி கேட்க இறை ஊழியர் தேவசகாயம் சென்றார். ஆனால்
ஏற்கனவே அந்தணர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தைப் பற்றி பல
குற்றங்களை தளவாயிடம் கூறியிருந்ததால் இருவருக்குமிடையே
வாக்குவாதம் நிகழ்ந்தன. தம்மால் ஏழைக் கிறித்தவர்கள்
பாதிக்கப்படுவார்கள் என்றெண்ணி வரப்போகும் துன்பங்களை
நினைத்து மனதுருகி இறைவனிடம் வேண்டினார்.
கிறித்தவர்களை துன்புறுத்தும் போதெல்லாம் அவர்
இறைவனை இடைவிடாமல் வேண்டினார். துன்பங்களைத் தாங்கிக்
கொண்டு எவ்வாறு தன் தந்தையின் விருப்பத்தை இறைமகன் இயேசு
நிறைவேற்றினாரோ அதுபோல தான் கிறித்தவ மதத்திற்காக, கிறித்து
இயேசுவுக்காக பொய்க் குற்றங்களையும், போ- மனிதர்களையும்
தாங்கிக் கொள்ள மனத்திடன் கிடைக்க மனதார வேண்டினார்.
திருப்பாடல் ஆசிரியர் புகழ்வது போலத் தானும் இறைவனைப்
புகழ்ந்தார்.
""ஆண்டவரே! என்மேல் இரக்கமாயிரும். ஏனெனில் நான்
துன்ப நெருக்கடியில் அகப்பட்டிருக்கிறேன். என் கண்கள்
வருத்தத்தால் பலவீனமடைகின்றன. என் உடலும், உயிரும்
அப்படியே'' என மனம் உருகினார்.
பு-யூர்க்குறிச்சி காட்டில் தேவசகாயத்தின் கொடூர
நடைபயணம் தொடர்ந்த போது அவருக்குத் தாங்க முடியாத அளவுக்கு
தண்ணீர் தாகம் ஏற்பட்டது. காவலர்கள் கொடுத்த அழுக்கானத்
தண்ணீரைப் பருகிய பிறகும் அவருக்கு இயேசுவின்மேல் இருந்த
தாகத்தைப் போன்று தீராதத் தாகம் எடுத்தது. இந்நிலையில்
தாகத்தோடு கேட்ட போது காவலர்கள் அவருக்கு தண்ணீர் தர
மறுத்தனர். இறை வேண்டலே தனது தாகத்தைத் தணிக்க முடியும்
என்று உணர்ந்தவராய் தனிமையில் இறைவனை நோக்கி இதயத்தை
எழுப்பினார். ""இயேசுவே!'' என்று அழைத்தார்.
""அனாதையாக, யாருமற்றவனாக, ஏழையிலும் ஏழையாக,
உலகத்தில் அனைவராலும் கைவிடப்பட்ட பரதேசியாக, ஏன்

என்னைக் கைவிட்டீர்? உமது துணையின்றி எனக்கு யார் துணை!
என் இறைவா! நீர் இரங்காவிட்டால் என் தாகம் தணிய வழியேது?
நீரே எனக்குத் தாகத்தைத் தந்தவர்! நீர் தரும் தண்ணீரன்றி என்
தாகமும், பசியும் அகலாது. என் தொண்டை வரண்டு விட்டது! என்
ஆண்டவரே! தாங்க முடியாத என் தாகத்தை உமக்குக்
காணிக்கையாக வைக்கிறேன்'' என்று துன்ப வேளையிலும் தன்னை
முழுவதுமாக இறைவனுக்கு ஒப்புக் கொடுத்தார்.
"ஒரேப்' என்ற பாறையி-ருந்து மோசே உதவியால் இஸ்ராயேல்
மக்களுக்குத் தண்ணீர் தந்து காப்பாற்றிய நல்ல தேவனே எனக்கும்
நீர் விரும்பினால் இந்தப் பாறையி-ருந்து தண்ணீர் தரமுடியும்.
ஆண்டவரே, எனக்குக் குடிக்கத் தண்ணீர் தாரும்"' என்று வேண்டி
பாறைமேல் கைமுட்டை ஊன்றி இடித்தார். முட்டூன்றிய இடம்
முழுவதும் தண்ணீரால் நிரம்பியது. புது ஊற்று உதயமானது.
பெருவிளையில் மரத்தடியில் மரண வேதனை அனுபவித்த
காலத்திலும் இறைவன் மீது கொண்ட அன்பை கைவிடவில்லை.
தன்னைத் தேடி வந்த மக்களுக்காக செபிக்க தவறியதில்லை.
எருமைமேல் ஏற்றப்பட்டு ஆங்காங்கே கொண்டுச்
செல்லப்பட்டு இறுதியாக பத்மனாபபுரத்திற்கு இறை ஊழியர்
தேவசகாயத்தைக் கொண்டு வந்தபோது, ""தனது நாட்டின் தலைவரான
மன்னர் மார்த்தாண்ட வர்மாவையும், அவரது மந்திரிகளையும்,
ஊழியர்களையும் என்னைப் போல் மனம் திருப்பி இரட்சித்தருளும்''
என்றும் செபித்தார்.
ii) விசாரணையின் போது
கல்குளம் தாலுகா அதிகாரியின் தண்டனையைப் பெற்று
அகஸ்தீஸ்வரம் தாலுகா அதிகாரி முன்பு கொண்டு செல்லும்
காலக்கட்டத்தில் கொடுமைகளைத் தாங்கிக் கொண்டு மக்கள்
மத்தியில் ஆண்டவரைப் புகழ்ந்தார்.
"பெருங்கூட்டத்தின் மத்தியிலும் நான் உமக்கு நன்றி
செலுத்துவேன். திரளான மக்களிடையே உம்மைப் போற்றிப்
புகழ்வேன். மாசின்மையும், நேர்மையும் எனக்குப் பாதுகாப்பாக
இருக்கட்டும். ஆண்டவரே! நான் உம்மை நம்புகிறேன். உமது புகழை
அனைவருக்கும் வெளிப்படுத்துவேன். உமது அற்புதசெயல்
அனைத்தையும் எடுத்துரைப்பவனாய் உமது பீடத்தை வலம்
வருகிறேன்'' என மன்றாடினார்.
தோவாளை தாலுகா அதிகாரி முன் கொண்டு செல்லும் முன்
அதிகாலையில் தேவசகாயம் செபிக்கத் தொடங்கினார்.
விளவங்கோடு வெட்டுவென்னியில் தண்டனை பெற்றுக் கொடிய
பயணத்தை மேற்கொள்ளும்போதும் அவர் செபித்தார்.
நெய்யாற்றின்கரையில் இரவில் எறும்புக் கூண்டுக்குள் அடைத்தும்
பகலில் மிளகு தண்ணி குடிக்கக் கொடுத்து கொடுமைப்படுத்திய
போதும் செபித்தார்.
திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டதை அறிந்து
கொண்ட மீனவர் மக்கள் அவரைக் காண கூட்டம் கூட்டமாக
வந்தனர். இதனைத் தடுக்க அவரை இரகசியமான இடத்தில் சிறை
வைக்க மன்னன் ஆணையிட்டார். ஆனால் இறை ஊழியர்
தேவசகாயத்தின் செபமோ வித்தியாசமாக இருந்தது.
"இறைவா! இந்நாட்டு மக்கள் உம்மை அறிந்திருந்தும்
ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்களே! கீழ்த்திசையிலிருந்து ஞானிகளான
மூன்று அரசர்கள் எவ்வளவு சிரமம் தாங்கி உம்மை ஆராதிக்க
வந்தார்கள்! காடும், மலையும், பாலைவன மணல் சூடும், குளிரும்,
மழையும் தாண்டி நீண்டதூரம் பயணம் மேற்க்கொண்டார்களே!
மொழியறியாத நாட்டில் ஏரோது என்ற அரசனிடம் சென்று
மன்றாடினார்கள்! -எதையும் தாங்கும் மனவுறுதியுடன் மண்ணில்
பயணம் மேற்கொண்டு தங்களின் அசையாத விசுவாசத்தை
எங்களுக்கு விட்டுச் சென்றார்கள். இத்தனை மனவுறுதி மிக்க
முன்னோர்களின் காலடிகளைப் பின்தொடர்ந்து நானும் என் நாட்டு
மக்களும் உம்மோடு வரக்கிருபை செய்தருளும்!'' என்று வேண்டினார்.

இறை ஊழியர் தேவசகாயம் ஒருநாள் இயேசுவின் பாடுகளை
தியானித்துக் கொண்டிருந்தபோது கண்ணீர் விட்டழுது ""இறைவா நீர்
இவ்வளவு துன்பப்பட நான் சுகத்தோடிருப்பது நீதியாகுமா? இன்னும்
கூடுதல் துன்பம் எனக்கு வந்தாலும் போதாதே'' என்று மன்றாடினார்.
iii) சிறையில்
சிறையில் இருக்கும் போதும் இறைவனைப் புகழ்ந்து வேண்டினார்.
பத்மனாபபுரம் சிறைக்கூடம் பக்திமயமாக மாறியது. தன்னுடன் இருந்த
புலவர் தொம்மன் திருமுத்துடன் சேர்ந்து இறைவனைப் புகழ்ந்து பாடி
ஆராதித்தார்கள். மக்களுக்கு எதிராகச் செய்யப்படும் கொடுமைகளை
நினைத்து மனம் வருந்தி வேண்டினார். கண்மூடி செபிக்கும்போது தன்நிலை
மறந்தவராய் இறைவனுடன் இணைந்து விடுவார்.
iv) காற்றாடிமலையில்
காற்றாடிமலையில் கிராத்தடியால் தூக்கிவரப்பட்டு சுட்டுக்
கொல்லும்முன் செபிக்க நேரம் கேட்டு இறைவனிடம் செபித்தார்.
""என் இறைவா, இத்தனை நாட்களும் நீர் எனக்கு செய்த
நன்மைகளும் உதவிகளும் அளவற்றவையே! ஆயினும் இந்நேரத்தில்
உமது சிறப்பான உதவியைக் கெஞ்சிக் கேட்கிறேன். இந்த மரண
ஆபத்தில் பயந்து தத்தளியாமல் உமது திரு இரத்தத்தின் பலனால்
நல்ல மனத்துணிவுடன் இருக்க உம்மை மன்றாடுகிறேன். மேலும்
அடியேன் மட்டில் இரக்கமாய் இருந்து என் ஆன்மாவையும்
உடலையும் கையேற்றுக் கொள்ளும். உமது திருவுளப்படி நான் நடக்க
அருள்புரியும்'' என்று வேண்டுதல் செய்தார்.
v) பொதுவாக இறை ஊழியர் தேவசகாயம் அடிக்கடி செய்து வந்த செபம்
" நித்திய நரகத்தில் விழும் திரளில் நின்று என்னைக் காத்திட
திருவுளமான என் இயேசுவே! மனிதரின் மீட்பிற்காய் கல்வாரி
மலையில் சிலுவையில் இறந்த என் இயேசுவே! உமது
அன்பிரக்கத்திற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
வசந்த காலத்தில் தென்றல் காற்றில் அசைந்தாடும்
மணமிகும் ரோஜா மலரைப் போன்று எனது இதயத்தைத் தூயதாக்கி,
அதனை உம் தூய அடிகளில் அர்ப்பணிக்கிறேன்.
தண்ணீரில் பாய்ந்தோடும் நீர் மிகு நதியினைப் போல் என்
வாய்மொழியால் உம்மைப் புகழ்வேன்.
எனது நன்றியறிதல் அணுவினைப் போல் மிகவும் சிறியதே.
திருக்கன்னி மரியின் திருக்கரங்களால் சீராட்டப்பெறும் பாலனான
இயேசுவே! உமது புன்னகையால் என் பாவங்களனைத்தையும்
அகற்றிடும். நான் உட-லும் மனதிலும் ஆவியிலும் இப்பொழுது
துயருறுகிறேன். சாவின் கொடூரப் பிடியிலும் உம்மைப் பின்
செல்வதற்கான அருளைத் தாரும் ஆண்டவரே!'' -- ஆமென் என்று
அடிக்கடி செபித்து வந்தார்.
இவ்வாறு அவர் எல்லா இடங்களிலும் இறைவனோடு
செபத்தின் வழியாக உறவு வைத்திருந்தார். நாமும்
இறைவனிடம் இடைவிடாமல் செபம் செய்ய வேண்டும்.
மாதாவிடமும் நமக்காக பரிந்து பேச நாம் கேட்க வேண்டும். நீ
காலையிலும், இரவில் துôங்கப் போகும் முன்பும் இறைவனிடம்
செபிப்பாய் என்று நம்புகிறேன். உன் பதில் கடிதத்திற்காகக்
காத்திருக்கிறேன்.
உன் அன்புள்ள,
மாமா.

24-05-2010
நாகர்கோவில்

அன்பு மாமாவுக்கு,

தேன்மொழி எழுதுவது. நாங்கள் அனைவரும் நலம்.
ஆலயத்தில் உயிர்ப்பு திருநாளுக்கு முட்டையில் பெயர் எழுதி
ஆளுக்கொரு முட்டை எடுக்கச் சொன்னார்கள். இனிப்பு
வழங்கினார்கள். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாகக்
கொண்டாடினோம். திருப்ப-க்கும் சென்றோம்.
கொடைக்கானலுக்குச் சென்று 21-ஆம் நாள்
திரும்பினோம். நன்றாக இருந்தது. மலர்களையும், பனிபடர்ந்த
மலைகளையும் அழகாக ரசித்தோம். புகைப்படமும் எடுத்தோம்.
அடுத்தக் கடிதத்தோடு புகைப்படத்தையும் அனுப்பி வைக்கிறேன்.
மாமா நான் தூங்கப் போகும் முன்பும், காலையில் தூங்கி
விழித்த பின்பும் செபிக்கிறேன்.
இறை ஊழியர் தேவசகாயத்தின் செப வல்லமையைப்
பார்த்து பூரித்துப் போனேன். அவரின் -மையான மனதிற்கு
செபங்கள் தான் காரணம் என்று தெரிந்து கொண்டேன்.
ஆமாம், அவர் எதற்காக கொல்லப்பட்டார்? அவர் மேல் அப்படி
என்னக் குற்றம் சுமத்தினார்கள் என்றுக் குறிப்பிடுங்கள்.
விடுமுறை முடிந்து சூன் 2-ஆம் நாள் பள்ளியில் மீண்டும் புதுக்
கல்வியாண்டில் காலடி எடுத்து வைக்கப் போகிறேன்.
உங்களுக்காகவும் செபிக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் 7 சுமத்தப்பட்ட குற்றங்கள்

02-06-2010
பெங்களூர்

அன்புள்ள தேன்மொழிக்கு,

பாசமிகு மாமா எழுதுவது, நான் நலமாக உள்ளேன்.
உயிர்ப்பு விழா பற்றியும், சுற்றுலாவிற்கு சிறந்த முறையில் போய் வந்ததாகவும் குறிப்பிட்டிருந்தாய். மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் இன்று விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிக்குச் சென்றிருப்பீர்கள். நன்றாக படியுங்கள். உங்களது நடனப்
பயிற்சி வகுப்பு எவ்வாறு இருந்தது? பயனுள்ளதாக இருந்ததா?
இறை ஊழியர் தேவசகாயத்தின் மீது ஏராளமானக்
குற்றங்களை சுமத்தினார்கள். அரசனிடமிருந்து எப்படியாவது
தண்டனைப் பெற்றுக் கொடுத்துவிட வேண்டுமென்று தீவிரமாக
செயல்பட்டார்கள்.
பிலாத்துவின் அரண்மனையில்
இயேசுவைக் குற்றவாளி என்று கூக்குர-ட்டவர்கள்
மார்த்தாண்ட வர்மா அரண்மனையில்
இறை ஊழியர் தேவசகாயம் நிரபராதி
என்று குரல் கொடுக்கப் போகிறார்கள்?
இறை இயேசுவையே சிலுவையிலறைந்து
வேடிக்கைப் பார்த்தவர்கள்
இறை ஊழியரையா விட்டுவைக்கப் போகிறார்கள்?..
இயேசுவைக் கொல்ல ஓலமிட்டவர்கள்
தேவசகாயத்தைக் கொல்ல திட்டமிட்டதில்
ஆச்சரியமில்லை - முடிவு
இறை இயேசுவுக்குக் கல்வாரிமலையில் மரணம்.
இறை ஊழியருக்குக் காற்றாடிமலையில் மரணம்.
ஏன் இவருக்கு இந்த தண்டனைகள்? இவர் செய்த
குற்றமெல்லாம் கிறித்தவ மதத்தை ஏற்றுக் கொண்டது தான்.
கிறித்தவம் பரவிவிடுமோ என அரசன் அஞ்சினான். எனவே இவர்
மேல் பொய்க்குற்றம் சுமத்திக் கொன்றார்கள்.
இவரது மரணம்
திருவிதாங்கூர் வரலாற்றையேத் திருப்பிப் போடும்
என்று எண்ணியிருக்க மாட்டார்கள்.
திரு இரத்தம் சிந்திய இடம் திருத்தலமாகக் கூடும்
என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்
துன்பப் பயணம் மேற்கொண்ட இடங்களெல்லாம்
திருச்சபையின் தீபங்களாகக் கூடும் என்று
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
மரண நேரத்தில் பட்ட காயங்கள் பரமன் இயேசுவை
நினைவுபடுத்தும் என்று கருதியிருக்க மாட்டார்கள்.
அரண்மனையிலும் தாலுகாவிலும் மக்கள் முன்பும்
குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவர் நிறைவாழ்வைப் பெற்றுக்
கொண்டார். இல்லங்களிலும் பாதுகாவலராக வணக்கம் பெறுகிறார்.
கொலைக் குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும்
தண்டனைகளை விடக் கொடுமையான முறையில் இவர்
தண்டிக்கப்பட்டார். இவர் மேல் குற்றம் ஒன்றும் காணவில்லை எனக்
கைகழுவிய விசாரணை அதிகாரிகளும் இருந்தனர். பொய்யானக்
குற்றச்சாட்டுக்கள் எனத் தெரிந்தும் இறைமகன் இயேசுவுக்காக,
கிறித்தவ மறைக்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டார்.
இதுவரை வரலாறு பொய்க்குற்றங்களால் -யாக்கப்பட்டவர்களைப்
புதியவர்களாக புதுமையானவர்களாக நினைவில் வைத்திருக்கிறது.
மக்கள் மனதில் பதியம் போட்டிருக்கிறது.
இறை ஊழியர் மேல் சுமத்தப்பட்டக் குற்றங்கள்:
i) இந்து மதம் சார்ந்த குற்றம்:
முதலாவதாக "பூணூல்'' பற்றிய விவாதம் இறை ஊழியர்
தேவசகாயத்திற்கும், பிராமணர்களுக்கும் இடையே நிகழ்ந்த ஒரு
முக்கியமான விவாதம். இந்த விவாதமே இறை ஊழியர்
தேவசகாயத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றங்களில்
முக்கியமானதாகவும், அவர் கைது செய்யப்பட தகுந்த ஆதாரமாகவும்
அமைந்தது.
"மன்னரும் மக்களும் வழிபடும் கடவுளர்களை நீ
மதிக்கவில்லை. இந்த மடைமையை உன்னிடமிருந்து அகற்றி
இந்நாட்டி-ருந்து உன் புதிய மதத்தை விரட்டும் வரை நான் ஒரு
பிராமணன் அல்ல, நான் அணிந்திருக்கும் பூணூல் புனிதமானதல்ல''
என சவால் விட்டார் பிராமணர்.
அவர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தின் மேல் எந்த ஒரு
குற்றத்தையும் காணாததால் அவரை வீண் விவாதத்திற்கு உள்ளாக்கி
குற்றவாளியாக்கும் செயலில் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்கள்.
எங்கெல்லாம் அவரை கோபத்திற்கும், ஆவேசத்திற்கும் இட்டுச்
செல்ல முடியுமோ அங்கெல்லாம் அவரை ஆட்படுத்தினார்கள்.
மக்களை மனதிலும் இறைவனை இதயத்திலும் ஏற்ற அவருக்கு
இப்படிப்பட்ட கொடிய சொற்கள் அவரைக் கோபப்படுத்தின. ஆனால்
அவர் எந்த ஒரு காலகட்டத்திலும் பிற மதங்களை இழிவுபடுத்த
நினைக்கவில்லை.
இறை ஊழியர் தேவசகாயம் இந்து மதத்தை மதிக்கவில்லை
என நாம் கூற முடியாது. தான் ஏற்றுக் கொண்ட, தான் பின்பற்றிய
கிறித்தவ மதத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவரால்
விட்டுக்கொடுக்க முடியவில்லை. அளவுக்கு அதிகமாக இறைவனின்
எதார்த்த தத்துவங்களும்; பகிர்தல், அன்பு, நீதி, சமத்துவம்,
சகோதரத்துவம் என்னும் இறையாட்சியின் விழுமியங்களும்
அவருக்குள் விழுதாய் விழுந்ததால் அவரால் மற்ற வழிபாட்டு
முறைகளையும் மற்ற சடங்கு சம்பிரதாயங்களையும் ஏற்றுக்கொள்ள
முடியவில்லை. ஆர்வம் இல்லாத செயல்களில் அவர் எப்பொழுதும்
ஈடுபட விரும்பவில்லை எனக் கூறலாம்.
ii) அடித்தட்டு மக்கள்
சாதிக் கட்டுப்பாடுகளை மீறி ஒதுக்கப்பட்ட ஈனர்களோடு
இறை ஊழியர் தேவசகாயம் பழகுகிறார். கீழ்மட்ட மக்களோடும்,
பரங்கி எனப்பட்டவர்களோடும் உறவாடி ஒன்று சேர்ந்து
உணவருந்துகிறார்.
கீழ்மட்ட மக்களோடு உணவு உண்கிறார். எதை
பரிமாறினாலும் உண்கிறார் எவ்வளவு அழுக்காக இருந்தாலும் தன்
துணிகளை சுத்தம் செய்யாது தன்னையும் கழுவிக் கொள்ளாத ஒரே
துர்நாற்றம் அடிக்கும் மக்களோடு வாழ்ந்து விட்டு அரசவைக்குத்
துணிச்சலாக வருகிறார். அங்கே பிராமணர் போன்ற உயர்குடி
மக்களோடு பழகுகிறார்.
iii) அவமரியாதை
திருவோணப் பண்டிகை நாளில் அரசரின் முன்னிலையில்
அரண்மனை அதிகாரிகள் பால் கொண்டு சுவாமி வழிபாடு செய்வது
வழக்கம். அப்படி நடைபெற்ற பண்டிகையில் இவர் கலந்து
கொள்ளவில்லை, மேலும் அரசருக்கும் வரி செலுத்த
வேண்டியதில்லை என்று மக்களைத் தூண்டி வருகிறார்.
இறை ஊழியர் தேவசகாயம் திருவிதாங்கோடு நாட்டின்
பத்மனாபபுரம் மத்திய சிறையில் இருந்தபோது அவர் மீது
அந்தணர்கள் மன்னரிடம் உயர்சாதி மக்களையும் கிறித்தவம்
சேர்க்கிறார். அவர்களின் உதவி அதிக அளவில் அவருக்குக்
கிடைக்கிறது. மன்னர் திருமேனியை அவர் மரியாதை செய்வதில்லை.
காளியினருளால் பல அற்புதங்களை செய்கிறார்.
கிறித்துவின் அருள் எனக் கூறி மக்கள் கிறித்தவத்தை நாட
வைக்கிறார். இவரால் சொக்க நாதனையும் பகவதியம்மனையும்
மக்கள் நிந்திக்கிறார்கள். நான்கு வேதங்களையும் அதைத் தாங்கி
நிற்கும் தூண்களாகக் கருதப்படும் பிரம்மனையும், பிராமணர்களையும்
இகழ்கிறார். பாவ புண்ணியம் என உரைத்து மக்களைத்
திசைதிருப்புகிறார் என ஆணவ சக்திகள் அவமரியாதை
வார்த்தைகளால் அவருக்கு பட்டம் சூட்டியது.
iv) தளவாயின் குற்றச்சாட்டு
தளவாயும் தனக்குண்டான சந்தர்ப்பத்தை சரியாகப்
பயன்படுத்தி இறை ஊழியர் தேவசகாயத்தைப் பற்றி அரசனிடம்
குற்றம் சாட்டினான். மன்னர் சொல்லை இறை ஊழியர் தேவசகாயம்
மதிக்கவில்லை. கிறித்தவர்களை வாதப்படுத்தவும், அவர்களுக்குத்
துன்பம் செய்யும் நீங்கள் நினைத்தால் நானும் ஒரு கிறித்தவன்
என்பதை அறிந்து என்னிடமிருந்து ஆரம்பியுங்கள் என்று திமிராகப்
பேசுகிறார். வாடி வதங்கிக் கிடந்த கிறித்தவ சமூகத்திற்கு, ஏழை
எளிய கிறித்தவர்களுக்கு "நான் தலைவன்' என்று உரைக்கிறார்.
அரண்மனை காரியதரிசி "நீலக்கண்டன்', "தேவசகாயம்' என
பெயர் மாற்றிக் கொண்டு கிறித்தவமதம் சேர்ந்து கொண்டு நமது
தேவர்களையும், வழிபாடு செய்பவர்களையும் அவமதித்துப்
பேசுகிறார்.
ஈனர்களும், அடிமைகளுமாகிய கீழ்சாதி மக்களுடன்
நெருக்கமான தொடர்பு வைத்திருக்கிறார். காற்றும், மழையும்,
வெயிலும், ஆவியும் அவர் வார்த்தைக்கு அஞ்சுவதைப் போல்
இடியென முழங்குகிறார். அந்தணர்களைத் தூற்றுவதோடு அரசரை
நிந்திக்கிறார். தளவாயை மானமில்லாதவர், மூடன் என்கிறார்.
v) மன்னரின் குற்றச்சாட்டு
அந்தணர்கள் தேவசகாயத்தைப் பற்றி கூறியதைக் கேட்ட
மன்னனும் இறை ஊழியர் தேவசகாயத்தை அழைத்து, "நீ
தளபதிக்கும், கீழ்படியவில்லை. உயர்சாதியினர் கிறித்தவம்
சேரக்கூடாது என்ற நாட்டின் சட்டத்தை மீறி கிறித்தவம் தழுவினாய்.
அரண்மனை விழாவில் கலந்து கொள்ளவில்லை. தேவர்களைப்
பழிக்கிறாய்'' என்று குற்றம் சுமத்தினார்.
மன்னரும், தளவாயும் அந்தணர்களும் தங்களது
குற்றங்களைக் கூறி கைது செய்தபின்பு தாலுகா அதிகாரிகளின்
விசாரணைக்கு இறை ஊழியர் தேவசகாயத்தைக் கொண்டு
சென்றார்கள். அங்கேயும் தாலுகா அதிகாரிகள் இவர்மேல் குற்றம்
சாட்டினார்கள்.
தாலுகா அதிகாரிகள் குற்றங்கள்
 கல்குளம் தாலுகா மன்னரை எதிர்க்கிறாய்.
 அகஸ்தீஸ்வரம் தாலுகா மன்னரையும், நாட்டையும்
அவமதிக்கிறாய் மன்னர்
கட்டளைகளை ஏற்கவில்லை.
 தோவாளை தாலுகா அரசரின் கட்டளைகளை மதிக்க
வில்லை
 விளவங்கோடு
வெட்டுவென்னி தாலுகா ஈன சாதியர்களின் தலைவர் இவர்
 நெய்யாற்றின் கரை
தாலுகா பெரிய இராஜதுரோகி இவர்
 நெடுமங்காடு தாலுகா அரசருக்குக் கீழ்படியாமல், கீழ்சாதி
மதத்தில் சேர்ந்திருக்கிறாய்
 சிறையின் கீழ் தாலுகா மன்னரின் கட்டளைகளை இவர்
மீறியவர். மன்னரின் ஆட்சியை
அவமானப்படுத்த துணிந்தவர்.
கீழ்சாதி மக்களின் ஈன மதத்தில்
சேர்ந்தவர்.
இவ்வாறு தேவசகாயத்தின் மீது பொய்க் குற்றத்திற்காக
குற்றம் சுமத்தி கொடுமைகளைச் செய்தார்கள். நாமும் பிறர்
மீது பழி சுமத்தும்போது ஆராய்ந்து பார்க்க வேண்டும். யாரையும்
உடனடியாகக் குற்றவாளி என்று தீர்ப்பிடக்கூடாது. இதை நீ
அறிந்து கொள்ள வேண்டும். பதில் கடிதம் உடனே அனுப்பு.
சுற்றுலா புகைப்படத்தை மறக்காமல் அனுப்பு.
உன் அன்புள்ள,
மாமா.

 

21-06-2010
நாகர்கோவில்

அன்புமிகு மாமாவுக்கு,

தேன்மொழி எழுதுவது. நாங்கள் அனைவரும் நலம்.
நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையில் கடிதத்தைத்
துவங்குகிறேன். பள்ளி திறந்தாச்சி. ஒழுங்காக இருவரும்
பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறோம். விடுமுறையில்
இருவரும் கரகம், கும்மி, ஒயில் போன்ற நாட்டுப்புறக்
கலைகளைக் கற்றுள்ளோம். வருகின்ற ஆலயத் திருவிழா
கலைநிகழ்ச்சியில் நாங்களும் கலந்து கொள்வோம். பயிற்சி
மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
இறை ஊழியர் தேவசகாயத்தின் மீது இத்தனைக்
குற்றசாட்டுக்களா? இந்தக் குற்றச்சாட்டுகளுக்காக அவர்
கொடுமைகளை அனுபவித்தாரா? எந்த மாதிரியானக்
கொடுமைகள் அவர் அனுபவித்தார்? விரிவாக அடுத்தக்
கடிதத்தில் குறிப்பிடுங்கள். இக்கடிதத்துடன் சுற்றுலா
புகைப்படத்தையும் அனுப்பியுள்ளேன். மறக்காமல் பதில் கடிதம்
எழுதவும்.
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் 8 பாடுகளின் காலக்கொடுமைகள்

06-07-2010
பெங்களூர்

அன்பு தேன்மொழிக்கு,

பாசமிகு மாமா எழுதுவது. நான் இங்கு நலம். நீ
அனுப்பியக் கடிதம் பார்த்தேன். ஆலயத் திருவிழாவின்
கலைநிகழ்ச்சியில் பங்குக்கொண்டு சிறப்பிக்கப் போவதாய்
எழுதியிருந்தாய். மிக்க மகிழ்ச்சி.
புகைப்படத்தைப் பார்த்தேன். மிகவும் அழகாக
எடுத்திருக்கிறீர்கள். ஆமாம். கொடைக்கான-ல் எந்தெந்த
இடங்களுக்கெல்லாம் சென்றாய்? தம்பி, அம்மா, அப்பாவிடம்
கேட்டதாக சொல்.
இறை ஊழியர் தேவசகாயம் பல கொடுமைகளை
அனுபவித்தார். இறை ஊழியர் தேவசகாயம் பட்டக் கொடுமைகள்
கொடுங்குற்றவாளிகளுக்கு அளிக்கப்படும் கொடுமைகளை விட
கொடூரமானவை. மனதைப் பிளக்கும் இந்தக் கொடுமைகளை
நினைத்து பார்ப்பதற்கே இயலாதது. எதற்காக இந்த வேதனைகள்?
எதற்காக இந்தக் கொடுமைகள் நிறைந்த பரிசுகள்?


சாதிக்காகப் போர்க் கொடித் தூக்கிய சங்கங்கள் -- இனி
நீதிக்காகப் போர்க் கொடித் தூக்கட்டும் என
விரும்பியதால் இந்த துப்பாக்கித் தோட்டாக்கள் பரிசா?
அடக்குமுறைகளுக்கு எழும்பியக் கைகள் - இனி
ஆதரவற்றவர்களுக்காக எழும்பட்டும் என எண்ணியதால்
இந்த எருமை ஊர்வலமும், எருக்கம் பூமாலையும் பரிசா?
ஆணவம் கொண்ட அகந்தையின் மனிதர்கள் - இனி
ஆணிவேர் அறுந்த மரம் போல் சாயட்டும் என சாடியதால்
இந்த மலைவாச சிறைச்சாலைகள் பரிசா?
மதங்களுக்காக மாண்ட இதயங்கள் - இனி
மனிதனுக்காக வாழட்டும் என முழங்கியதால்
இந்த கருஞ்சூரை முள்ளினால் இரத்தப் பரிசா?
சுயநலத்தால் சுவடு இழந்த உள்ளங்கள் - இனி
பிறர் நலனுக்காக வரலாறு படைக்கட்டும் என உரைத்ததால்
இந்தக் கை, கால் விலங்கும், மிளகாய்ப் பொடியும்,
சுண்ணாம்புச் சூளையும் பரிசா?
மூடநம்பிக்கையால் முகவரி இழந்த முகங்கள்- - இனிக்
கல்விச்சுனையால் கண் திறக்கட்டும் என வெகுண்டெழுந்ததால்
இந்தக் காட்டுப்பாறை கடும் வெயில் சிம்மாசனம் பரிசா?
மாற்றங்கள் வரவேண்டும், இயேசுவை மறுத-க்க முடியாது
என்ற வீர சிந்தனைக்கு உரமிட்டதால்தான் இவருக்கு இந்தக்
கொடுமைகள்.
ஆங்காங்கே இழுத்துச் செல்லப்பட்டு இல்லாத, செய்யாத
குற்றத்திற்காக கொடுமைகள் அனுபவித்தார். குளுமைக்காட்டில்
வைத்துக் கொல்ல திட்டமிட்டார்கள். அவமான எருமை ஊர்வல
பவனியில் மனம் மாற்ற முயற்சித்தார்கள். ஆராச்சாரிடம்
ஒப்படைத்து கழுவிலேற்றியோ, தலையைத் துண்டித்தோ தரணியை
விட்டு அகற்றத் துடித்தார்கள். அனைத்தும் தோல்வியிலேயே
முடிந்தது. மனம் மாறக் கூட்டிச் சென்றவர் பலரின் மனமாற்றத்திற்குக்
காரணமானார். விலங்கிட்டு சிறையில் அடைத்தார்கள். மிளகு
அரைத்து காயங்களிலும், உடல் முழுவதும் பூசினார்கள். உணவு
கொடுக்காமல் உறக்கமில்லாமல் கொடுங்காவல் சிறையில்
அடைத்தார்கள். இவற்றையெல்லாம் இறை ஊழியர் தேவசகாயம்
இயேசுவினுடைய திருப்பாடுகளை தியானித்துத் தாங்கிக் கொண்டார்.
மதம் மாறிய பிறகு அரசவை வேலை காணாமல் போனது.
நண்பர்களிடமிருந்து ஒதுக்கப்பட்டார்.
தனிமையை உணர்ந்தாலும்
இறைவனின் உடனிருப்பை உணர்ந்தார்.
தந்தையின் இறைசித்தத்தை
நிறைவேற்றிய இயேசுவைப் போல்,
தான் மனம் உவந்து ஏற்றுக் கொண்ட மதத்திற்காகவும்,
மக்களுக்காகவும் எல்லாக் கொடுமைகளையும் தாங்கிக்
கொண்டு இறைவனின் சித்தத்தை நிறைவேற்றினார்.
பயணத்தில் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு இவர்
பட்டக் கொடுமைகளைக் காணமுடியாமல் கலங்கினார்கள்.
அனுதாபத்துடன் இரக்கமும் கலந்து இறைமகன் இயேசுவின் இறுதிப்
பயணத்தில் அழுத பெண்களைப் போன்று இவரின் கொடுமைப்
பயணத்திலும் பல பெண்கள் அழுதார்கள். இவரின் கொடுமைகள்
கீழ்சாதியினருக்கு பாடம் புகட்டிக் கீழ்ப்படிய வைக்கும் என்ற தெம்பில்
வீரவசனம் பேசியவர்களும் அவருடன் இருந்தார்கள். அரண்மனை
மாடங்களிலும், அரசவை நிகழ்வுகளிலும் கலந்துக் கொண்ட
மாமனிதனுக்கு இந்த நிலையா? என்று ஏங்கியவர்களும், உண்மை
தெய்வம் என்று நம்பிக்கை வைத்தானே இவர் இவனை
காப்பாற்றட்டும் என்று ஒதுக்கியவர்களும் இல்லாமல் இல்லை.
கண்கலங்கிக் கொண்டு, அவரின் காயங்களைக் காண முடியாமல்
உற்றார் உறவினர்களும் நண்பர்களும் செயலற்றே நின்றார்கள்.
அரசனின் கட்டளையை அவர்களால் மீற முடியவில்லை.
கிறித்தவம் தந்த மகிழ்ச்சியை அவமானப் பவனியில்
எடுத்துரைத்தார். எருமை ஊர்வலத்தை இறைவனுக்கு ஓசானாப்
பாடும் ஊர்வலமாக்கினார். எருக்கம் பூமாலையை இறைவன்
கொடுத்த குருத்தோலை என்று தோளில் ஏந்திக் கொண்டார்.
இறுதிநேரப் பயணம்,
கால்களைக் கூட எடுத்துவைக்க முடியாமல் தடுமாறியிருப்பார்
கடுஞ்சொல்லையும், பொய்க் குற்றங்களையும்
தாங்கிய அவருக்கு நடந்த பாதைகள் ஒன்றும்
அவ்வளவு கடினமானதாகத் தெரிந்திருக்காது.
தன்னால் தன் மக்களுக்கும் மறைக்கும் துன்பம் வந்துவிடுமோ
என்று யோசித்த அவருக்கு
சிறைஅவமானங்களும், மலைமேல் கொடூர மகுடமும்
அவ்வளவுக் கடினமாகத் தெரிந்திருக்காது.
உறவுகளையும் உரிமைகளையும், உடைமைகளையும் விடுத்து
உன்னதக் கிறித்துவில் மகிழ்ந்த அவருக்கு
தோட்டாக்கள் ஒன்றும் தோல்வியைத் தந்திருக்க முடியாது.
பக-ல் பார்வையை மங்கச் செய்யும் பகலவனின்
ஒளிப்பார்வையும், ஏளனம் நிறைந்த மனிதப்பார்வையும்
கடந்து அவர் பயணிக்க வேண்டியிருந்தது
இரவில் இரக்கம் இல்லாத அரக்கர்களின் மத்தியில் உறக்கம்
இன்றி தவிக்க வேண்டியிருந்தது.
உணவும், உடையும், உறைவிடமுமின்றி
தள்ளாட வேண்டியிருந்தது.
இந்தக் கொடுமைகள் இறை ஊழியர் தேவசகாயத்திற்கு ஒரு
புதிய கல்வாரிப் பாதையை உருவாக்கியது. அவர் அவமானப்
பவனியிலும், சிறையிலும், தாலுகா அதிகாரிகளின் கீழும், காற்றாடி
மலையிலும் பட்டக் கொடுமைகளை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
i) அவமானப் பவனியில்
அவமானப் பவனியில் எருமைமேல் ஏற்றப்பட்டு ஊர் ஊராகக்
கொண்டு செல்லப்படும் போது முட்கசையால் அவரை அடித்தார்கள்.
அவரது காயங்களில் குறிப்பாக கண்களில் மிளகாய்ப் பொடியை
தேய்த்தார்கள். மனித பாரத்தை முதுகில் உணர்ந்த எருமை அவரை
உலுக்கிக் கீழே எறிந்தது. ஆதரவற்றவராகத் தரையில் விழுந்து கிடந்தார்.
எருமைமேல் ஏற்றும் போது கைகள் இரண்டும் கட்டப்பட்ட
நிலையில் பின்னோக்கி அமர வைக்கப்பட்டார். எருக்கு மாலை
அணிந்து அரச வீதிகளைச் சுற்றி வரவழைக்கப்பட்டார். கிறித்தவ
மறையை விட்டுவிட்டு தங்கள் வழிக்குத் திரும்பிவர பிராமணப்
பண்டிதர்களின் அறிவுரைகளைப் பகிரங்கமாகக் கேட்க
அறிவுறுத்தப்பட்டார். அறிவுரையை ஏற்றுக் கொள்ளாததால்
30 அடிகள் வீதம் தினமும் பிரம்பினால் அடிக்கப்பட்டார்.
முறிவுகளிலும், கண், மூக்கு, காதுகளிலும், காய்ந்த மிளகுப்பொடியை
அரைத்துப் பூசி வெயி-ல் நிறுத்தி வைக்கப்பட்டார்.
நடை பயணத்தில் பசியின் கொடுமையையும் தாங்கிக் கொண்டு
நடப்பதற்கு இயலாதவராய் தள்ளாடிச் சென்றார். கடின வெயி-ல்
பாறைமேல் உட்கார வைக்கப்பட்டார். தாகத்திற்குத் தென்னை மடல்
ஊறவைத்த நாற்றமெடுக்கும் தண்ணீரைப் பருக கொடுத்தார்கள்.
பெருவிளையில் கூரையில்லாத, பட்ட வேப்பமரத்தின்
அடியில் கொடிய வெயிலையும், பனியையும், மழையையும் தாங்கினார்.
அங்கும் இங்கும் அசைய முடியாத அளவுக்கு மரத்தின் நடுவே
கால்கள் இரண்டும் கயிறால் பலமாகக் கட்டி வைக்கப்பட்டார்.
குழித்துறையில் சிவன் கோவி-ல் அதிகாரம் பெற்ற
அந்தணர்கள் இறை ஊழியர் தேவசகாயத்தை சுண்ணாம்புச்
சூளையில் அடைத்தார்கள். இதனால் அவருக்குத் தீங்கு
ஏற்படாததால் மிளகாய் சூளையில் இட்டு சித்திரவதை செய்தனர்.
ஆரல்வாய்மொழியில் பூவரசு மரத்தடியில் நிறுத்தி, விலங்கு
மாட்டி நிமிர்ந்து நிற்கவோ, உட்காரவோ, படுக்கவோ முடியாதபடி
சங்கி-யால் கட்டி வைக்கப்பட்டார். தினமும் ஒருவேளை உணவு
மட்டுமே கொடுத்தார்கள். வெயி-ன் கொடுமையாலும், காற்றின்
வேகத்தாலும் துன்பப்பட்டார்.

ii) சிறையில்
சிறையில் இவர் பட்டக் கொடுமைகள் மிகவும் கொடியது.
இறை ஊழியர் தேவசகாயம் கைது செய்யப்பட்டு பத்மநாபபுரம்,
திருவிதாங்கோடு, குளுமைக்காடு, திருவனந்தபுரம், பெருவிளை,
இராமன்புதூர், ஆரல்வாய்மொழி கோட்டைவாசல் போன்ற
சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தார்.
அரசரின் இரகசிய ஆணையின் பேரில் அடித்துக்
கொடுமைப்படுத்தினர். வேளை தவறி உணவளிப்பது, வசைமாரி
பொழிந்து மனதை மாற்றுவது என்று கொடுமைப்படுத்தினார்கள்.
மறுபடியும் இந்து மதத்தைத் தழுவினால் அரசரின் அன்புக்கு
ஆளாகலாம் என்ற ஆசை வார்த்தைகளையும் கேட்டு மனம்
உடைந்தவராய் காணப்பட்டார்.
சில சமயம் உணவு ஏதும் கொடுக்காமல் கருஞ்சூரை
முள்ளினால் அடிக்கப்பட்டார். அறிவுரை வழங்கியும், மனதை மாற்ற
விபூதி கொடுத்தும் கொடுமைப்படுத்தினார்கள்.

iii) விசாரணையில்
ஆரல்வாய்மொழிக் கோட்டைவாசல் சிறையில் சங்கி-யால்
பிணைக்கப்பட்டு கூரையில்லாத அசுத்தமான இடத்தில், மழைக்கும்
வெயிலுக்கும் பாதுகாப்பின்றி படுக்கவைக்கப்பட்டார். தொடர்ந்து
மூன்று நாட்கள் இரவும் பகலும் மழைபெய்ததால்
களிமண்ணுக்குள்ளே ஏறக்குறைய புதைக்கப்பட்டார்.
இவர் தாலுகா அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பின்பு
அனுபவித்த கொடுமைகள்:
 கல்குளம் தாலுகா: கல்குளம் வட்டாச்சிக்குட்பட்ட அனைத்துக்
கிராமங்களிலும் ஒருமாதம் எருமை ஊர்வலமாகக் கொண்டு சென்று,
தினமும் உள்ளங்காலில் முப்பது அடிகள் கொடுத்தார்கள்.
 அகஸ்திஸ்வரம் தாலுகா: அகஸ்தீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட
எல்லாக் கிராமங்களுக்கும் அவர் கொண்டுச் செல்லப்பட்டார். வெயிலில்
கட்டி வைத்து சூரைமுள் கொண்டு உடல்கீற அடித்தார்கள்.
அக்காயங்களில் மிளகுப் பொடியை தேய்த்துக் கொடுமைப்படுத்தினார்கள்.
 தோவாளை தாலுகா: -கல்தூணில் கட்டிவைத்து அடித்தார்கள்.
 விளவங்கோடு வெட்டுவென்னி தாலுகா: -புதிய பானைகளை
அவரைச் சுற்றி அமைத்து அதன் உள்ளே தீயிட்டுப் பானையில்
மிளகுகளை நிரப்பி புகையச் செய்தார்கள். மிளகுப் புகையில் மூச்சுத்
திணறி மரண வேதனை அடையச் செய்தார்கள்.
 நெய்யாற்றின்கரை தாலுகா: பகல் முழுவதும் நடத்தி மிளகு
அரைத்துக் குடிக்கக் கொடுக்கப்பட்டார். இரவில் மரப்பேழையில்
அடைத்து வைக்கப்பட்டு எறும்புகளால் கடிக்க வைக்கப்பட்டார்.
இரவில் தூங்க முடியாமல் தவிக்கச் செய்தார்கள்.
 நெடுமங்காடு தாலுகா: வாயில் கூடையைக் கட்டி மக்களிடம்
பேச முடியாமல் தடுத்தார்கள். இரவில் பாம்பும், தேளும் விடப்பட்ட
சருகு நிறைந்த அறையில் படுக்க வைத்தார்கள்.
 சிறையின் கீழ் தாலுகா: அஞ்சுதெங்குக் கோட்டையருகில்
கொண்டு சென்று கட்டி வைத்து "மீன்களுக்கு இரையாக ஒரு
மனிதனைத் தருகிறோம்'' என்று எழுதி வைத்து வெளிநாட்டு
உள்நாட்டுக் கிறித்தவர்களிடையில் முரசடித்துப் பறைசாற்றினார்கள்.
 திருவனந்தபுரம் தாலுகா: குரங்குகள் வளர்க்கும் வளையினுள்
அடைக்கப்பட்டார். துற்நாற்றமும், படுக்கவோ எழும்பவோ இயலாத
நிலையில் அடைக்கப்பட்டார். எருமை மேல் ஏற்றி வலம் வரப்பட்டார்.
இரவில் பூவரசு மரத்தில் கட்டி வைத்தார்கள்.
இவ்வளவுக் கொடுமைகளையும் தாங்கி, கொள்கையில்
வெற்றி பெற்றார். அவர் ஒரு சிறந்த போராளி. அடுத்த உன்
பதிலுக்காகக் காத்திருக்கும்,
உன் அன்புள்ள,
மாமா.


20-07-2010
நாகர்கோவில்

அன்புமிகு மாமாவுக்கு,

உங்கள் அன்பை மறவாத தேன்மொழி எழுதுவது. இங்கு அனைவரும் நலம். கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையில்
அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்
பூ கடைசியாக 2006-ஆம் ஆண்டு பூத்ததாம்.
இங்கு நாங்கள் பிரையண்ட் பார்க், தொலைநோக்கிக்
காப்பகம் மற்றும் கோகர்ஸ்வாக், தூண் பாறைகள், குணா
குகைகள், தொப்பி தூக்கிப் பாறைகள், மதிகெட்டான் சோலை,
பேரிஜம் ஏரி, படகுத்துறை, வெள்ளி நீர்வீழ்ச்சி போன்றவற்றை
பார்த்து மகிழ்ந்தோம்.
இறை ஊழியர் தேவசகாயம் இவ்வளவுக்
கொடுமைகளை அனுபவித்தும் அவர் உறுதியாக இருந்தார்
என்றால் அது அவர் இறைவன் மீது கொண்ட அன்பு தான்
காரணம். இறை ஊழியர் தேவசகாயம் ஒரு சிறந்த போராளி
என்று கடந்த கடிதத்தில் எழுதியிருந்தீர்கள். அவரது
போராட்ட வாழ்வை குறிப்பிட்டு எழுதுங்கள்.
உங்கள் கடிதத்திற்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு
தேன்மொழி

கடிதம் 9 எதிர்கொண்ட போராட்டங்கள்

02-08-2010
பெங்களூர்

அன்பு தேன்மொழிக்கு,

உன் அன்பு மாமா எழுதுவது, கடிதம் கிடைத்தது.
நீ கொடைக்கான-ல் பார்த்த இடங்களைப் பற்றி
எழுதியிருந்தாய். சந்தோசமாக இருந்தது.
போராட்டங்கள் இறை ஊழியர் தேவசகாயத்தின் வாழ்வில், மிக முக்கியமாக கிறித்தவத்தை ஏற்றுக் கொண்டபோது இருந்தது.
எல்லாப் போராட்டங்களையும் வெற்றிக்கண்டு மறைசாட்சி மகுடம்
பெற்றார். வீடு முதல் தான் விண்ணக வாயிலை அடையும் வரை
அவர் போராட்டங்களை எதிர்கொண்டார். எல்லாம் கிறித்துவுக்காக,
இறுதியாக விண்ணக அரியணையில் இடம் பெற்றார்.
அவரின் போராட்ட வாழ்வை இங்கே வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
இறை ஊழியர் தேவசகாயம் ஒரு மாபெரும் போராளி. தற்போதைய
சூழ்நிலையில் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டம். ""போராட்டமே
பொதுமக்களின் திருவிழா'' என ஆகிவிட்ட ஒரு காலக்கட்டம்.
"நெஞ்சு பொறுக்கு தில்லையே -- இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடி என்றால் அது பெரிதாமோ?''
என முண்டாசுக் கவிஞர் பாரதி மனம் வெதும்புவது போல
சின்னஞ்சிறு குழந்தைகள்
தொழிற்சாலைகளில் போராடும் சூழ்நிலை.
இளைஞர்கள் வாழ்க்கையோடும்,
சமுதாயச் சிக்கல்களோடும் போராடும் அவலம்,
பெண்கள் விளம்பரப் பொருட்களாகவும்,
வியாபாரப் பொருட்களாகவும் விற்கப்படும் சூழ்நிலை.
முதியவர்கள் வயதோடும்,
பிள்ளைகளின் பராமரிப்புக்காகவும் போராடும் அவலம்.
இத்தகையப் போராட்டத்தில் தான் சாதாரண மனிதன்
பயணிக்க வேண்டியிருக்கிறது. நம் இறை ஊழியரின் போராட்டமோ
கொஞ்சம் வித்தியாசமானவை. தனது போராட்டத்தைக் குடும்பத்திலிருந்து
தொடங்கி அரண்மனை வழியாக காற்றாடிமலை வரைக் கடந்து சென்று
முடித்தவர்.
மதம் மாறிக் கிறித்தவத்தை ஏற்றுக் கொள்வதில் போராட்டம்.
மனைவியோடு மனம்மாற்ற போராட்டம், மாமியாரோடு மாற்று சிந்தனைப்
போராட்டம், அந்தணர்களுடன் அறியாமையின் இருள் அகற்றிய
போராட்டம், மன்னரோடு போராட்டம், தளவாய் இராமையனோடு
மக்களுக்கான துன்பங்களை தானே ஏற்றுப் போராட்டம்.
விசாரணை அதிகாரிகளுடன் விவி- வழி போதனையுடன்
கூடிய வித்தியாசமான போராட்டம், செபத்தின் முன்னால்
சாத்தானுடன் போராட்டம், குடும்பத்தினரோடு மதம் சார்ந்த
போராட்டம், காவலர்களுடனான நெடும்பயணப் போராட்டம்,..
இத்தனை போராட்டங்களிலும் இறைவனுடைய வல்லமையைப்
பெற்று வெற்றி பெற்றார்.

i) மனைவி
"நம் முன்னோர்களான பெரியோர்களும், மாமன்னர்களும்,
மகா முனிவர்களும் ஆராதனை செய்து வந்த தேவர்களைக் கைவிட
நினைப்பது முறையா?'' என்ற வினாவுடன் எழுந்த இறை ஊழியர்
தேவசகாயத்தின் மனைவி பார்கவி அம்மையாரின் மனமாற்றப்
போராட்டத்தில் இனிமையான போதனையாலும், சான்றுடன் கூடிய
விளக்கத்தாலும், ஒரே கடவுள் போதனையாலும் பார்கவி
அம்மையாரை ஞானப்பூ (திரேசா) என்னும் பெயருடன் திருமுழுக்கு
பெற வைத்தார். இறை ஊழியர் தேவசகாயமும், அவரது மனைவியும்
தங்களது வாழ்க்கையில் இறையரசின் மதிப்பீடுகளை வாழ்ந்து
காட்டினார்கள்.
ii) மாமியார்
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனமாற்ற நிகழ்ச்சியை
தேவசகாயத்தின் மாமியாரிடம் மனைவி சொல்லக் கண்ணீருடன் தன்
மருமகனைக் கடிந்து கொண்டாள். இறை ஊழியர் தேவசகாயத்திடம்
மாமியாரின் வாதங்கள் தோல்வியைக் கண்டன. மகளிடம் வந்து "உன்
கணவனுக்கு ஈன சாதியர் யாரோ வசீக மருந்தைக் கொடுத்து
விட்டார்கள். இந்நாள் வரை என் சொல்லைத் தட்டாத மருமகன்
என் வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை. யாரோ புத்தியை மழுங்கச்
செய்து விட்டதால் அவரது சொல்லும் செயலும் மாறிப் போய்
விட்டன; அறிவில்லாமல் ஏதோ பிதற்றுவது போல் தோன்றுகிறது.
அம்மா நீயும் அவனை பின்பற்றி விடாதே'' எனக் கூறினாள்.
மனைவி ஞானப்பூ தன் அம்மாவிடம் தன்னுடையக் கணவர் செல்வது
சரியான வழியே என்று விளக்கினார். மனைவியிடமும் மாமியாரின்
பேச்சு ஒன்றுமில்லாத தன்மையை அடைந்தது.
இறை ஊழியர் தேவசகாயம் திருவிதாங்கோடு சிறையில்
இருந்தபோது துணைவியாரின் தந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில்
அவருக்காக இறைவேண்டல் செய்து சுகம் பெறச் செய்தார்.
இதனைக் கண்டு ஆச்சரியமுற்று துணைவியாரின் தாயாரும்,
ஆண்மக்களில் சிலரும் இயேசு தர்மத்தைத் தழுவினார்கள்.
இறுதியில் மாமியாருடனான மாற்றுச் சிந்தனை போராட்டத்தில்
வெற்றி பெற்றார் இறை ஊழியர் தேவசகாயம்.
iii) அந்தணர்கள்
சமயங்களுடனான போராட்டத்தில் அந்தணர்களுடன் நடந்த
போராட்டங்கள் முக்கியமானவை. உயர் பதவிகளில் வீற்றிருந்த இந்த
அந்தணர்கள் அரசருக்கும், அரியணைக்கும் நெருக்கமானவர்கள்.
தாய் தந்தையர்களின் வழிபாட்டு முறைகளை தவறாமல் வேதம்
என்று கடைபிடித்தார்கள்.
கிறித்தவ மதத்தை விடாப்பிடியாக பற்றி நின்ற இறை
ஊழியர் தேவசகாயத்திடம் பிராமணர் ஒருவர் விட்ட
"பூணூல்-அரைஞாண்' சபதம் மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.
இறை ஊழியர் தேவசகாயத்தை மனமாற்ற வைக்கும்படியாக
வந்த அதிகாரிகள் மனம் மாறுவதை உணர்ந்து அந்தணர்கள்
முணுமுணுத்தார்கள். அறியாமையால், அறிய மனமில்லாதவர்களாய்
இருந்த பல உயர்சாதியினரையும் இவர் மனம் மாற்றினார்.
அறியாமை இருளகற்றிய போராட்டத்தில் வெற்றியும் பெற்றார்.
iv) மன்னர்
அந்தணர்களின் குற்றச்சாட்டுக்களையும், கண்ணீரையும்
கண்ட மன்னர் மார்த்தாண்டவர்மா தன் அரண்மனையில்
தேவசகாயத்தை சந்தித்தார்.
"நீலகண்டா! உன் புத்தி தடுமாறி விட்டதா? நம்மையும் நம்
தேவர்களையும் பழிக்கும்படி என்ன நடந்தது? ஆற்றலும் அறிவும்
மிகுந்த உனக்கு ஏன் இந்த அறிவீனம்? காலமெல்லாம் நாமும் நம்
முன்னோர்களும் போற்றி வந்த தேவர்களைப் பழிக்க உன் புத்தி
மழுங்கிவிட்டதா? இப்படிச் செய்தால் உன்னை நாடு கடத்தி
நரபலியிடுவோம்'' என்று இடிமுழக்கம் போல் வெடித்தார்.
ஆனால் அதே சமயம் தேவசகாயத்தின் அமைதியான
பதிலும், அன்பான விவிலியவழி எடுத்துக்காட்டும் மன்னர்
மார்த்தாண்ட வர்மாவை  பல நேரங்களில் சிந்திக்க வைத்தது.
இவருக்கு எதிராக பலக் கட்டளைகளை இட்டபிறகும் அதனைத்
திரும்ப பெற்றதும் இவருடைய மனக்குழப்பமே என்று நமக்கு
காட்டுகிறது. மன்னரின் கட்டளைகள் அன்றைய சமூகச்
சூழ்நிலையில் மாற்ற முடியாத ஏன் திரும்பப் பெற முடியாத ஒன்று.
கட்டளைகளை மீறுவதும் மாபெரும் குற்றம். ஆனால் இறை ஊழியர்
தேவசகாயத்திற்கு எதிராக மன்னர் இட்ட கட்டளைகள் பெரும்பாலும்
மாற்றி அமைக்கப்பட்டன.
இறுதியில் இறை ஊழியர் தேவசகாயம் இறந்ததை
அறிந்ததும் மன்னர் வேதனைப்பட்டார். விவேகமற்ற செயல் என
உணர்ந்தார். இறுதிவரை இறை ஊழியர் தேவசகாயம் தான் பெற்ற
கிறித்தவ மதத்தை மறுத-க்காமல் உயிரையும் துறந்து
போராட்டத்தில் வெற்றி பெற்றார்.
v) தளவாய்
இராமையன் தளவாய் சூழ்ச்சிமிக்கத் தந்திரக்காரன். பணம்
கொடுத்து எதிரியின் படையை பின்வாங்கச் செய்யும் மந்திரம்
அறிந்தவன். இவருடன் நடந்த போராட்டம் வித்தியாசமானது.
தளவாயோ இறை ஊழியர் தேவசகாயத்தைக் கொல்லும் நாளுக்காகக்
காத்திருந்தான். பல தருணங்களில் மன்னரிடமிருந்தும்
கொல்வதற்கான ஆணைகளைப் பெற்றான்.
ஒருநாள் அருட்பணி. புத்தாரி அவர்களின்
மரத்தேவைக்கானக் கடிதத்தை எடுத்துக்கொண்டு இறை ஊழியர்
தேவசகாயம் இராமையன் தளவாயைப் பார்க்கச் சென்றார்.
இராமையன் தளவாயோ ஏற்கனவே அந்தணர்களின் வழியாக
கேட்டறிந்த செய்திகளை வைத்து இறை ஊழியர் தேவசகாயத்தின்
மேல் கோபத்துடன் இருந்தான்.

இறை ஊழியர் தேவசகாயமும் இராமையனைப் பார்த்து மரம்
தேவையை அறிவித்த உடனே தளவாய், ""பிராமணர்களையும்,
தேவர்களையும் நீ நிந்தித்தாயா? பிராமணர்களுக்கு எதிராகச்
செயல்பட வந்துள்ளாயா? நம்மையும் நமது தேவர்களையும்
ஆட்சேபித்த உன்னையும் உனது நண்பர்களையும் இந்நேரத்தில்
தூக்கிலிடுகிறேன்'' என்று கோபம் கொண்டு சிங்கத்தைப் போல்
கர்ச்சித்துப் பேசினார்.
ஆனால் தேவசகாயம் கொஞ்சமும் பயமில்லாமல்
அமைதியாக அவருக்கு பதில் கூறினார். தன் மக்களுக்கும், தன்
கூட இருப்பவர்களுக்கும் துன்பங்கள் வரக்கூடாது என்று செபித்தார்.
vi) தாலுகா அதிகாரிகள்
மன்னன் முன்பும் தளவாய் முன்பும் நடந்து முடிந்த
விசாரணைப் போராட்டம் எட்டு தாலுகா அதிகாரிகளின் முன்பும்
தொடர்ந்தது. விசாரணையின் முடிவில் இவரிடம் குற்றம்
காணமுடியாமல் சில தாலுகா அதிகாரிகள் தவிக்கவும் செய்தார்கள்.
இன்னும் சிலர் மனமாற்ற முடியாமல் விசாரணையை முடித்தார்கள்.
மன்னரை எதிர்த்துப் பேசியது, கீழ்ப்படியாதது என்பது போன்ற
குற்றங்கள் முதன்மையானக் குற்றங்களாக இறை ஊழியர்
தேவசகாயத்தின் மேல் சுமத்தப்பட்டன. இவரை மனமாற்றம் அடைய
வைத்து மன்னரின் பாராட்டைப் பெற்றுவிடவேண்டும் என்று
எண்ணியவர்கள் கூட இவரின் போராட்டம் நிறைந்த விவேகமான
அன்பான நேர்மையான பேச்சு மற்றும் போதனையால் அமைதி
காத்தனர்.
vii) சாத்தானுடன் போராட்டம்
இறைமகனை பாலைநிலத்தில் சோதித்த சாத்தான், யோபுவின்
வாழ்க்கையில் விளையாடிய சாத்தான், இவரின் வாழ்வையும்
சோதித்து மனவுறுதியை மழுங்கடிக்கப் பார்த்தது.
பெருவிளையில் ஆராச்சாரின் சிறையில் சாத்தான்
பயங்கரமான கொடிய உருவத்தில் அவருக்குத் தோன்றி அவரை
அச்சுறுத்தவும் அவரது மனத்துணிவைக் கலைக்கவும் முயற்சித்தது.
ஆனால் அவர் மனங்கலங்காமலும், அஞ்சாமலும் அந்தக் கொடிய
சாத்தானை நோக்கி, ""ஆண்டவருடைய அடிமையாகிய என்னிடத்தில்
உனக்கு எந்த வேலையும் இல்லை'' என்று சொல்லவே சாத்தான்
மறைந்து போனான்.
திருவனந்தபுரம் மண்டபத்தின் வாச-ல் இறைவேண்டல்
செய்து கொண்டிருந்த இறை ஊழியர் தேவசகாயம் மற்றும்
ஞானப்பூவின் பார்வையில் பொல்லாத பேய் ஒன்று தோன்றியது.
மனைவிக்காகவாவது நீ திரும்பவும் மதம் மாற வேண்டும் என்று
அலகை ஆசை காட்டியது. ஆனால் இறை ஊழியர் தேவசகாயம்
மன உறுதியோடு கரம் குவித்து தியானித்து அலகையின் ஆசையை
நிராகரித்து நம்பிக்கையை திடப்படுத்தினார்.
viii) குடும்பம்
குடும்பத்தினரிடையே நடந்த மதம் சார்ந்த இவரது
போராட்டம் இறைவேதத்தை பின்பற்ற வைத்தது. ஒருநாள் நட்டாலம்
வீட்டில் காளி பூசைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரணம்
இறை ஊழியர் தேவசகாயத்தின் மனமாற்றம் மாபெரும் குற்றம் என்று
குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தில் உள்ளோரும் எண்ணினார்கள்.
எதிர்பாராத விதமாக அங்கு வந்த இறை ஊழியர் தேவசகாயத்திடம்
குடும்பத்தார் விபூதியை கொடுக்க முயற்சித்தனர். அப்போது அங்கு
பரபரப்பும் வாக்குவாதமும் எழுந்தன. ஆனால் இவர் இறைவனை
நினைத்து தன் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டார்.
ix) காவலர்கள்
அரசனின் கட்டளைகளை நிறைவேற்றும் காவலர்கள்
அந்தணர்களின் சதித்திட்டத்திற்கும் காவலாக இருந்தார்கள்.
இவர்கள்தான் இறை ஊழியர் தேவசகாயத்தின் 7 ஆண்டுகால
திருமறைப் பணியில் அதிகமாக இவருடன் இருந்தவர்கள். மன்னரின்
கட்டளைக்கு ஏற்ப காவலர்கள் மாறினாலும் கடைசிவரை கூட
இருந்தவர்கள் இந்தக் காவலர்கள் தான். இறை ஊழியர்
தேவசகாயத்தின் இறப்பை மக்களிடம் அறிவித்தவர்களும் இந்தக்
காவலர்கள் தான். இறை ஊழியர் தேவசகாயத்தின் துன்ப பாதையில்
அதிகமாக பயணப்பட்டவர்களும் இவர்கள் தான். அனைத்துத்
தண்டனைகளையும் ஈவு இரக்கமின்றி நிறைவேற்றியவர்கள்
அந்தணர்களின் கட்டளைகளையும் நிறைவேற்றத் தவறவில்லை.
காவலர்களும் இவரை ஏளனம் செய்தார்கள். ஓய்வு, உறக்கம் என்பது
எப்போதுமே அவருக்கு காவலர்கள் அளிக்கவில்லை.
ஆனால் இறை ஊழியர் தேவசகாயமோ காவலர்களிடமும்
கனிவு காட்டினார். படைவீரர்களுடன் பணிவாகப் பேசினார்.
மக்களின் கூட்டமும், இவரின் போதனைகளும் காவலர்களை
கலங்கடித்தது. தனக்கு காணிக்கையாகக் கொடுக்கப்பட்ட
உணவுகளை காவலர்களுக்கும் வழங்கினார்.
எல்லாவற்றிலும் வெற்றிக் கண்டு மக்கள் மனதில் ஆட்சி
செய்யும் இறை ஊழியர் தேவசகாயத்தைப் போல நமக்கு என்னத்
துன்பங்கள் வந்தாலும் அதை நம்முடைய விசுவாசப்
பயணத்தைத் தொடர வேண்டும். உன் உடல்நலத்தை நன்றாக
பார்த்துக் கொள். பதில் கடிதத்திற்காக காத்திருக்கும்,
உன் அன்புள்ள,
மாமா.



19-08-2010
நாகர்கோவில்

அன்புமிகு மாமாவுக்கு,

உங்கள் தேன்மொழி எழுதுவது. இங்கு அனைவரும்
நலம். உங்கள் கடிதம் கண்டு மகிழ்வடைந்தேன். நீங்கள் இறை ஊழியர் தேவசகாயத்தின் போராட்ட வாழ்வை அழகாக வரிசைப்படுத்தியிருந்தீர்கள். நானும் என்
தோழியர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைத் தாங்கும்
மனப்பக்குவம் நமக்கு வேண்டும் என்று தெரிந்து
கொண்டேன். மாமா பள்ளியில் நடந்த கவிதைப்
போட்டியில் நான் பரிசு பெற்றிருக்கிறேன்.
தேவசகாயத்திற்கு எதிராக மன்னர் கட்டளை
இட்டாரா? எந்தெந்தக் கட்டளைகளை இட்டார் என்று
அடுத்தக் கடிதத்தில் எழுதி அனுப்புங்கள். உங்கள் கடிதம்
காண ஆவலாக இருக்கிறேன்.
உங்கள் பாசமிகு,
தேன்மொழி

கடிதம் 10 தண்டனை தந்த அரச கட்டளைகள்
01-09-2010
பெங்களூர்
பாசமிகு தேன்மொழிக்கு,

உன் அன்பை என்றும் மறவாத உன் மாமா எழுதுவது,
தேவசகாயத்தின் வாழ்க்கைக் குறிப்புகளை நான் உனக்கு எழுதித்
தந்திருக்கிறேன். நீ உன் பள்ளியில் கவிதைப் போட்டியில் பரிசுப்
பெற்றதாக எழுதியிருந்தாய். இறை ஊழியர் தேவசகாயத்தைப்
பற்றி ஒரு கவிதை அடுத்தக் கடிதத்தில் எழுதி அனுப்ப முடியுமா?
உன் கவிதையை நான் பார்க்க ஆசைப்படுகிறேன்.
இறை ஊழியர் தேவசகாயத்திற்கு அரசர் பல
தண்டனைகளை கொடுத்து இறுதியாகக் காற்றாடிமலையில்
கொல்லவும் ஆணையிட்டார். அதை இங்கு நான் வரிசையாகக்
குறிப்பிடுகிறேன்.
இறை ஊழியர் தேவசகாயத்திற்கு எதிராக அரசனின் கட்டளைகள்:
i) தேவசகாயம் மதம் மாறி விட்டான். பிறரையும் மதம் மாற்றிக்
கொண்டிருக்கிறான்... என்பது போன்றக் குற்றச்சாட்டுகளை
அந்தணர்களிடமிருந்து கேட்டு தளவாய் இராமையனிடம்
அதை உறுதி செய்து, இறை ஊழியர் தேவசகாயத்தை அழைத்து
வர ஆணையிட்டார்.
ii) இறை ஊழியர் தேவசகாயத்துடனான விசாரணையின் முடிவில்
"இவனை தற்போது சிறையில் அடையுங்கள், திருத்தம் ஏற்படுமா
என்று பார்ப்போம்'' என்று கட்டளையிட்டார்.
iii) இறை ஊழியர் தேவசகாயம் கைது செய்யப்பட்டபோது ""அவர்
காரியத்தில் தலையிட வேண்டாம்'' என்றும், ""கடலோரத்தில்
பணிபுரியும் குருக்கள் மீனவர்களையும் பிற சாதியினரையும்
மட்டும் கவனிக்க வேண்டும் என்றும், உயர் சாதியினரை
அவர்கள் பூர்வீக மதத்தி-ருந்து கவர்ந்து ஈர்க்கக்கூடாது''
என்றும் கட்டளையிட்டார்.
iv) இளவரசர் இராமவர்மா இறை ஊழியர் தேவசகாயத்தை
விடுவிக்க உத்தரவிட்டபோது, இறை ஊழியர் தேவசகாயத்தை
விடுவிக்கக் கூடாது என்றும், சங்கி-யால் அவரைக்
கட்டிப்போட வேண்டும் என்றும், கிறித்தவம் மேலும் பரவாமல்
அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அரசன்
ஆணை பிறப்பித்தான்.
v) இறை ஊழியர் தேவசகாயத்தை ஓர் எருமை மேல் ஏற்றித்
தெருவெல்லாம் அவமானப் பவனி நடத்தலாம் என்றும், சத்திய
வேதத்தைச் சார்ந்தோர் அனைவரும் பயந்து நடக்கும் படியாக
இறை ஊழியர் தேவசகாயத்தின் கழுத்தில் எருக்கு மாலை
அணிவித்து குளுமைக் காட்டில் கொண்டுபோய் தலையை
வெட்டும்படியும் ஆணையிட்டார்.

vi) "குளுமைக் காட்டில் வைத்து கொல்ல வேண்டாம்'' என அரசன்
திடீர் கட்டளை பிறப்பித்து மீண்டும் குளுமைக்காடு சிறையில்
அவரை அடைக்கச் செய்தார்.
vii) அவமான பவனியில் எப்போதும் இறை ஊழியர்
தேவசகாயத்திடம் காணப்பட்ட அமைதியையும் நிதானத்தையும்
பார்த்து வியந்த உற்றார் உறவினர்கள் இறை ஊழியர்
தேவசகாயத்தை ஏற்றுக் கொள்ள முன் வந்தனர். இதையறிந்த
மன்னர் விளவங்கோடு மண்டபத்தின் வாசல் அதிகாரியான
வட்டாட்சியாளருக்கு ஆள் அனுப்பி தண்டனையை இன்னும்
கடுமையாக்கும்படி ஆணையிட்டார்.
viii)அவமானப் பவனி படுதோல்வியைக் கண்டது. இவரைக்
கொண்டு சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் இவரை
வழிபட்டார்கள். ஆராதித்தார்கள். இவரது விழுமியங்களைப்
பெற்று இறைவனை புகழ்ந்தார்கள். இதனால் கோபமடைந்த
அரசன் பெருவிளைக்குக் கொண்டு சென்று ஆராச்சாரிடம்
ஒப்படைத்துக் கொல்ல கட்டளையிட்டார்.
ix) பெருவிளையில் ஆராச்சாரிடம் ஒப்படைத்துக் கொல்ல
திட்டமிட்டபோது, இவர் கேட்டவரம் கொடுத்ததால் இங்கேயும்
அவர்களின் முயற்சி தோல்வியைத் தழுவியது. புதுமைகள்
அரங்கேறியது. காவலர்கள் தப்பிக்கவும் உதவி செய்தார்கள்.
இறை ஊழியர் அதை மறுத்தார். அதனால் அரசன் அவரை
பெருவிளையி-ருந்து இரகசியமாக வேறு எங்காவது கொண்டு
சென்றுவிடும்படி உத்தரவு பிறப்பித்தார்.
x) தோவாளை என்ற ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச்
செல்ல திட்டம் தீட்டினார்கள். தோவாளை கூட தோல்விக்
கண்டது.
xi) "ஆரல்வாய்மொழி கோட்டை வாசல் பக்கம் கொண்டு சென்று
கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, உணவு ஏதும்
கொடுக்காமல் சிறையில் வைக்க வேண்டுமென்றும், இரவும்
பகலும் வீரர்கள் காவல் காக்க வேண்டுமென்றும்
எக்காரணத்தைக் கொண்டும் எவரும் பக்கத்தில் போக
அனுமதிக்கக்கூடாது'' என்றும் அரசன் கண்டிப்பான கட்டளை
பிறப்பித்தான்.
xii) "நீலகண்டனை எவருக்கும் தெரியாமல் காற்றாடிமலையில்
கொண்டு சென்று சுட்டுக் கொல்லுங்கள்'' என்று அரசன் இறுதிக்
கட்டளை பிறப்பித்தான். கால் கடுக்க மலை மேல் பயணத்திலும்
மனம் இறைவனையே போற்றியது.
1752-ஆம் ஆண்டு சனவரி 14-ஆம் நாள் ஐந்து
துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களுடன் காற்றாடிமலையில்
தனது மறைசாட்சி மகுடத்தைப் பெற்றார். இவரது இறப்பிற்குப்
பின் அங்கு அலைஅலையாய் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஓரங்கட்டப்பட்டு ஒதுக்குப்புறத்தில் கொல்லப்பட்டவர்
ஊருக்கு வரம் கொடுக்கும் மறைசாட்சியானார்!
பழி உரைத்து பழிதீர்க்கப்பட்டவர்
-பீடத்தின் புனிதப் பொருளானார்!
அரண்மனையில் இருந்து நீக்கப்பட்டவர்
வணக்கத்திற்குரியவராக இல்லங்களில் அரியணை ஏற்றார்.
இவ்வாறு அரசனின் எல்லாக் கட்டளைகளையும்
அவர் ஏற்றுக்கொண்டு இறைவனுக்காக இன்னுயிரையும்
ஈந்தார்.
உன் கவிதை கடிதத்திற்காக காத்திருக்கும்
உன் அன்புள்ள,
மாமா.




17-09-2010
நாகர்கோவில்

பாசமிகு மாமாவுக்கு,
நீங்கள் அனுப்பியக் கடிதத்தை பார்த்து மகிழ்ந்தேன்.
என்னிடம் தேவசகாயத்தைப் பற்றி ஒரு கவிதை எழுத சொல்-யிருக்கிறீர்கள். என்னால் முடிந்த அளவுக்கு ஒருக்கவிதை எழுதி அனுப்பியிருக்கிறேன். தவறு இருந்தால்
திருத்துங்கள். உங்கள் கருத்தை அடுத்தக்கடிதத்தில்
மறவாமல் குறிப்பிடுங்கள்.
மேலும் இறை ஊழியர் தேவசகாயத்தின்
புதுமைகளைப் பற்றி அறிய ஆசைப்படுகிறேன். அவர்
என்னென்ன புதுமைகளை எங்கெல்லாம் செய்தார்? இன்னும்
புதுமைகள் நடைபெறுகிறதா? அவரின் நினைவுக்
குருசடிகளைப் பற்றியும் குறிப்பிடுங்கள்.
இதய நாயகனே,
எண்ணத்தில் எழுந்து எழுத்தில் பிறந்து
சிந்தையில் நிறைந்த எம் மந்தையின் தலைவா!
மணம் மாறா மல்லிகையே!
வாழ்க வாழ்க என்று வாழ்த்தி
வணங்குகிறோம்!
மறுதலியா மாவீரனே!
உன் நினைவு மக்கள் மனதில்
வான் பெற்ற மதியாய் மிதந்து
கொண்டிருக்கிறது
காக்கும் கருணை வேந்தனே!
உமது மக்கள் பணியின் மகிமையை சரித்திரம் கூட
விசித்திரம் என சித்தரிக்கட்டும்
இறைபணியின் இனிமையை பூக்கும் பூக்கள் கூட
வாசம் என உணர்த்தட்டும்
அன்பின் வலிமையை அவனி கூட
அதிசயம் என வியக்கட்டும்.
அட்சயபாத்திரமாய், மங்கா ஒளிவிளக்காய்
புனிதர் மகுடம் சூட வாழ்த்துக்கள்!
நவரத்தின கூடாய்
வெள்ளி அருவியாய்
சிப்பிக்குள் முத்தாய்
இறைவாழ்வில் இலக்கணம் கண்ட இனியவரே...
உம் புனிதம் மிக்க பாதங்களை
நட்சத்திர பந்த-ல் தோரணம் கட்டி
வட்டநிலவில் பொட்டு செய்து
ஒய்யாரக் கதிரோனைத் தீபமாய் ஏற்றி
விரிந்த வானமுமாய்
பரந்த மனதுடன் வாழ்த்துகிறோம்!
வணங்குகிறோம்!
உங்கள் கடிதத்திற்காக காத்திருக்கும்
உங்கள் பாசமிகு,
தேன்மொழி


கடிதம் 11 புனிதம் காத்த புதுமைகள்

04-10-2010
பெங்களூர்

பாசமிகு தேன்மொழிக்கு,

உன் அன்பு மாமா எழுதுவது, நீ அனுப்பியக் கவிதை
கிடைக்கப் பெற்றது. நன்றாக எழுதியிருக்கிறாய். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உனது கையெழுத்தும் நன்றாக இருந்தது.
நீ அனுப்பிய கவிதையை மூன்று முறை படித்தேன். நீ
கேட்டமாதிரியே இறை ஊழியர் தேவசகாயம் பல புதுமைகளைச்
செய்திருக்கிறார்.
பாடுகள் அனுபவித்த இடங்களிலும், இன்றும் தனது
புதுமைகளை செய்து கொண்டிருக்கிறார். அவர் பெயரால்
கட்டப்பட்ட குருசடிகளையும் இங்கு குறிப்பிடுகிறேன்.
"காரிருள் என்று கதிரவன் தலைக்காட்டாமல்
தலைமறைவாகினால் தலைமுறையினருக்கு வாழ்வு எது?
சற்றுநேரம் ஓய்வெடுத்த பின் நகரலாம் என
கடிகார முட்கள் நினைத்தால் நிமிடங்கள் கூட
வருடங்கள் தானே!
தேய்கிறேன் என்று நிலவும் பொறுமையிழந்து
மறைந்துக் கொண்டால் வளர்பிறை ஏது?
வரும்போது பார் என்று அலைகள்
அடங்கிக் கொண்டால் கடலுக்கு அழகு ஏது?''
துன்பங்களால் துவண்டு முடங்கியிருந்தால்,
தேவசகாயத்திற்கு இறை ஊழியர் அங்கீகாரம் ஏது?
விண்ணக அரியணையில் புனிதர் மணி மகுடம் ஏது?
தேவசகாயத்தின் விசுவாச செபம் கலந்த புதுமைகள்
கிறித்தவம் பெற்ற புதுமைந்தனுக்கு புதுமுகத்தைத் தந்தது. ஆரவாரம்
இல்லாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அல்லல் உற்ற நேரத்திலும்
மக்களின் துயரத்தில் பங்குகொண்ட மாபெரும் மக்கள் போராளியின்
வாழ்வை உறுதிபடுத்தி வித்தியாசப்படுத்தியது.
செபங்கள் மூலம் இறைவனைக் கண்டார்.
இறைவனைக் கண்டு இதயத்தில் ஏற்றார்.
மக்களின் குறைதீர்க்கும் மருந்தானார்.
கொலைக்களத்திற்கு கொண்டு வரப்பட்டவரா குழந்தை பாக்கியம்
தரப்போகிறார் என்ற ஏக்கத்தில் இருந்த ஆராச்சாரின்
ஆவலை நிறைவேற்றினார்
ஆடுகளை இழந்த ஆட்டிடையர்களுக்கு ஆதரவாகவும்
ஆறுதலாகவும் இருந்தார்.
இன்னலுற்று நோயில் வாடிய மக்களுக்கு
இனிமையைத் தந்தார்.
மந்திரத்தாலும், தந்திரத்தாலும் சுய அறிவு இல்லாது
மூடநம்பிக்கையில் மூழ்கியிருந்த காலத்தில் இவரது புதுமைகள்
அர்த்தத்தைப் பெற்றன. பேய், பில்-சூனியம், செய்வினை என மக்களின்
மனங்களில் சிதறிக்கிடந்த சிக்கல்களை சீர்படுத்தின. கண்ணீரோடு
வந்தவர்களுக்கு கடவுளின் கருணையோடு செல்ல வழி வகுத்தன.
தாகத்தைப் போக்க பாறையில் முட்டிடிக்கத் தெரிந்த
இவருக்கு அந்தணர்களுடன் அனுசரித்துப் போகத் தெரியவில்லை.
ஆத்திரத்தை அடக்கி இறைவன்பால் அன்புகொள்ளத் தெரிந்த
இவருக்கு மன்னருடன் கைகோர்த்து இயேசுவை மறுத-க்கத்
தெரியவில்லை! மக்களின் மனக்கவலையை நீக்கத்தெரிந்த இவருக்கு
உண்மையை உதறித்தள்ள தெரியவில்லை!
கார்மேகக் கூட்டத்திற்குள் கைகோர்க்கும் மழைத்துளியாய்
இறைவனுடன் இணைந்து இறைவிசுவாசத்தை இல்லறங்களில்
ஆழப்படுத்தியதில் இவருக்கு பெரும் பங்குண்டு. பணத்திற்காக,
பதவிக்காக, பாராட்டுக்காக இவரது புதுமைகள் அரங்கேறவில்லை.
தன்னை நம்பாதவர்களுக்காகவும், சோதனை செய்பவர்களுக்காகவும்
இவர் புதுமைகளை நிகழ்த்தவில்லை. மாறாக, இருப்பதையும் இழந்து
நின்றவர்களுக்காகவும், இல்லாமையால் இயலாமல்
இருப்பவர்களுக்காகவும் நிகழ்த்தினார்.
கானாவூரில் முதல் புதுமையை தண்ணீரில் நிகழ்த்திய
இயேசுவைப் போல் இவரும் தனது முதல் புதுமையை பு-யூர்க்குறிச்சி
முட்டிடிச்சான் பாறைத் தண்ணீரில் நிகழ்த்தினார். இறைவன் இவரை
அழைத்த நேரம் வந்துவிட்டது என உணர்ந்து இறை வல்லமையின்
உதவியுடன் செய்த இவரது புதுமைகள் வயல்வெளியில் வீசப்பட்ட
விதைகள். விளைச்சலுடன் நல்ல அறுவடையையும் தந்தது.
அரசரும் அந்தணர்களும் கொஞ்சம்
அவசரப்படாமல் இருந்திருந்தால்
இப்படியொரு மக்கள் குறை தீர்க்கும்
புதுமைகள் நடந்திருக்காது.
வஞ்சகம் தீர்க்க உயர்வர்க்கத்தினர் வசைமொழிபடாதிருந்தால்
நெஞ்சம் பிளக்கும் இவரின் மரண நிகழ்வு நடந்திருக்காது.
குடும்பத்தாரும், உற்றாரும் தூற்றாமல் இருந்திருந்தால்
துன்பத்தின் வாசலும், அவமானத்தின் அலங்காரமும்
இவருக்குக் கிடைத்திருக்காது.
சண்டாளர்களோடும், சபிக்கப்பட்டவர்களோடும்
உறவாடி உணவருந்தாம-ருந்தால்
இந்த விண்ணக அரியணையில்
உரிய இடம் உருவாகியிருக்காது.
இவர் செய்த புதுமைகளே இவரின் புனிதர் நிலைக்கான
சான்று. இவரின் புதுமைகளைப் பார்த்தக் காவலர்கள் பின் அவருக்கு
யாதொரு தொல்லையும் கொடுக்காமல் இருந்தார்கள். தான் சென்ற
இடங்களிலெல்லாம் புதுமைகளை நிகழ்த்தினார். அவமான
பவனியிலும், ஆரல்வாய்மொழியிலும், பெருவிளையிலும்
புதுமைகளைச் செய்தார். அவர் இறந்த பிறகும் புதுமைகள் நடந்துக்
கொண்டேயிருக்கின்றன. இங்கே நான் அவர்செய்த புதுமைகளை
வரிசைப்படுத்தியிருக்கிறேன். இது உனக்கு மிகவும் உதவியாக
இருக்கும் என்று நம்புகிறேன்.
i) முதலாவதாக, தான் ஒன்றுமில்லாத்தன்மையை எப்பொழுதும்
நினைவில் கொண்டவராக மக்கள் தன்னை எவ்வளவுதான்
நாடிவந்து மதித்தாலும், தன்னைப்பற்றி ""அகங்காரம்
இல்லாதிருந்தது'' இறை ஊழியர் தேவசகாயத்திடம் நிகழ்ந்த
முதல் அற்புதமாகும்.
ii) "அரசரின் சொந்த மருத்துவரே ஏற்றுக்கொண்டது போல்''
மூன்றாண்டுகள் சிறையில் குளிக்காமலும், தலையில் எண்ணை
தேய்க்காமலும் இருந்தாலும் இறை ஊழியர் தேவசகாயத்தின்
அழகிய உடல் சுத்தமாகவும் எந்தவொரு துர்நாற்றமும் இன்றி
மிளிர்ந்தது. இது இறைவனால் அவரில் நடந்த புதுமையாகும்.
iii) புலியூர்க்குறிச்சி மலை வழியாக குற்றம் சாட்டப்பட்டவராக
கொண்டு செல்லப்பட்டபோது தாகத்தினால் வாடியவருக்கு
சேவர்களால் கொடுக்கப்பட்ட அழுக்குத் தண்ணீர் தாகத்தை
தீர்க்கவில்லை. மீண்டும் தண்ணீர் கேட்டார். காவலர்கள்
கொடுக்காததால் இறைவேண்டல் செய்து பாறைமேல் தன்
கைமுட்டை ஊன்றி ஓங்கி இடித்தார். அவர் முட்டூன்றிய
இடத்திலிருந்து ஒரு நீர் ஊற்று தோன்றியது. தாகம் தீரப் பருகினார்.
இப்பாறை "முட்டிடிச்சான் பாறை' என்று பெயர் பெற்றது.
iv) கொடுமையின் போது காவலர்கள் தாகம் தீர்க்க கடல் நீரை
கொடுத்த போது இறைவேண்டல் செய்து அவர் அதைக்
குடித்தார். உப்புநீர் நன்னீரானது.

v) காவலர்கள் நஞ்சு கலந்த குடிநீரை குடிக்க கொடுத்தனர். இறை
ஊழியர் தேவசகாயம் அதை வாங்கி சிலுவை அடையாளம்
வரைந்து பருகினார். நஞ்சு கலந்த குடிநீர் அவரை ஒன்றும்
செய்யவில்லை.
vi) பெருவிளையில் பட்டுப்போன வேப்பமரத்தில் இறை ஊழியர்
தேவசகாயத்தை கட்டி வைத்தனர். அந்த மரம் தளிர்த்து பூத்தது.
vii) சிறை அதிகாரி ஆராச்சாரின் மனைவி பல ஆண்டுகளாக
மகப்பேறு இன்றி வாடினார். மக்களால் மாபெரும் அவமானமாகக்
கருதப்பட்ட அந்நிலை மாறி இறை ஊழியர் தேவசகாயத்தின்
செபத்தினால் மகப்பேறு கிடைத்தது.
viii) கொடுமையின் போது உடலிலுள்ள காயங்களை அழுக
வைத்து அகோரப்படுத்துவதற்காக காவலர்கள் பயன்படுத்திய
மிளகுப்பொடி புண்களை குணமாக்கும் மருந்தாக மாறியது.
ix) ஒருநாள் இரண்டு ஆட்டு இடையர்கள் தனது எஜமானரின்
ஆடுகளை மேய்த்துக் கொண்டுவந்தபோது, கூட்டத்தில் வந்த
தலைமைக்கடா எப்படியோ விழுந்து துடித்து இறந்தது.
இடையர்கள் செய்வதறியாது இறை ஊழியர் தேவசகாயத்தைக்
கண்டு விபரம் தெரிவித்தனர். தங்களை காக்க மன்றாடினர். அவர்
இறந்த ஆட்டிற்கு உயிர் கொடுத்தார்.
x) இறந்த ஓர் ஆட்டினைத் தூக்கிக் கொண்டு இடையன் ஒருவன்
இறை ஊழியர் தேவசகாயத்திடம் பேசிக் கொண்டிருக்கும்
போது அந்த ஆடு உயிர்பெற்று கத்திக் கொண்டே ஓடியது.
xi) மகோதர நோயால் வருந்திய ஒரு பெண்ணை இறை ஊழியர்
தேவசகாயத்திடம் கொண்டு வந்தார்கள். இறை ஊழியர்
தேவசகாயம் இறைவனிடம் வேண்டி, அவரது நெற்றியில் சிலுவை
அடையாளம் வரைந்து குணப்படுத்தினார்.
xii) குழந்தை இல்லாத குறையால் தன் மாமியார் செய்யும்
கொடுமையைச் சொல்- ஒரு பெண் வருந்தி கண்ணீர் விட்டு
தனது வாழ்விழந்த நிலையைச் சொன்னாள். இறை ஊழியர்
தேவசகாயம் அவளைத் தேற்றி இறைவேண்டல் செய்து
குழந்தைச் செல்வம் கிடைக்கச் செய்தார்.
xiii) குடும்பத் தொல்லைகளி-ருந்தவர்கள், சமாதானம் இழந்தவர்கள்,
பசாசின் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் இறை ஊழியர்
தேவசகாயத்தின் செபத்தினால் நலம் அடைந்தார்கள்.
xiv) ஊமைப்பெண் தன்னால் பேசமுடியவில்லையே என்று ஏங்கி
இறை ஊழியர் தேவசகாயத்தைப் பார்த்தார். அவளுடன்
வந்தவர்கள் விபரத்தைக் கூறவே, இவருக்காக இறைவனிடம்
மன்றாடினார். அந்த ஊமைப் பெண் அந்த நேரமே பேசினாள்.
xv) திருவிதாங்கோடு சிறையில் இருக்கும்போது மனைவியின்
தந்தை நோயினால் படுக்கையிலானார். இறை ஊழியர்
தேவசகாயம் அவருக்காக இறைவனை மன்றாடி சுகம் பெறச்
செய்தார்.
xvi) அக்காலத்தில் கொடிய வியாதிகளாலும், நோய்களாலும்
பாதிக்கப்பட்ட மக்களுக்காக இறைவனை வேண்டினார்.
மக்களை தீண்டிய அந்த அபாயகரமான கொள்ளை நோய்கள்
மக்களிடமிருந்து நீங்கிப்போயின.
xvii) காற்றாடிமலையில் இறை ஊழியர் தேவசகாயத்தை சுடுவதற்கு
முன்பு மண்டியிட்டு செபித்த பாறையில் அவரது கை, கால்
முட்டுத் தடங்களை பதியச் செய்தார்.
xviii)காற்றாடிமலையில் இறை ஊழியர் தேவசகாயத்தைச் சுட்டு
வீழ்த்தியதும் மலையில் உள்ள ஒரு பாறை பளீரென பெயர்ந்து
மணியோசையுடன் கீழே விழுந்தது. இது "மணியடிச்சான் பாறை'
என்று அழைக்கப்படுகிறது.
xix) காற்றாடிமலையில் உயிரற்ற உடலுக்கு நிழல் தந்த ஆலமரம்
எக்காலத்திலும் வாடாமலும், வதங்காமலும் பச்சைபசேல் என்று
ஆண்டு முழுவதும் இருக்கிறது.
xx) காற்றாடிமலையில் அவர் கொல்லப்பட்ட பிறகு உடலைத் தேடி
மக்கள் ஆங்காங்கே அலைந்தார்கள். மேய்ச்சலுக்கு அங்கு
சென்ற கால்நடைகள் மாலையில் தொழுவத்திற்கு
வந்தடையாததால் மக்கள் மாடுகளைத்தேடிச் சென்றனர்.
கால்நடைகள் இறை ஊழியர் தேவசகாயத்தின் உடல் கிடந்த
பாறைக்கு அருகில் இறை ஊழியர் தேவசகாயத்தின் உடலைப்
பார்த்து கூடிக் கிடந்தன.
xxi) இறை ஊழியர் தேவசகாயத்தின் உடல் கோட்டாறு
பேராலயத்திற்கு மூட்டையில் கொண்டு வரப்படும் வழியில்
ஆரல்வாய்மொழி காவல் நிலையம் அருகே காவலர்களால்
வண்டி தடுத்து நிறுத்தப்பட்டது. மூட்டையில் என்ன? என்ற
கேள்விக்கு பூக்கள் என பதில் சொன்னார்கள். திறந்து
பார்த்தபோது அங்கே இருந்தது தேவசகாயத்தின் இறந்த
உடலல்ல, மாறாக பூக்களே!
xxii) காற்றாடிமலையில் இறை ஊழியர் தேவசகாயத்தின் உயிரற்ற
உடல் கிடந்த தரையின் மண் பக்தியுள்ள கத்தோ-க்கக்
கிறிஸ்தவர்களின் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக
பயன்படுகிறது.
xxiii)பெருவிளையில் ஏழு மாதங்களாகக் கட்டிவைக்கப்பட்ட
வேப்பமரம் இருந்த இடத்தில் தற்போது வளர்ந்துள்ள
வேப்பமரத்தின் இலையும் நோய்தீர்க்கும் மருந்தாக மக்களால்
பயன்படுத்தப்படுகிறது.
xxiv) ஏழு வருடங்கள் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்த,
திருச்சியை அடுத்த ஆவாரம் பட்டியைச் சார்ந்த திரு. இன்னாசி,
திருமதி. லூர்து மேரி தம்பதியினர் குழந்தைப் பேறு பெற்றனர்.
xxv) திண்டுக்கல் - புகையிலைப்பட்டியைச் சார்ந்த திருமதி. ஜோஸ்பின்
வசந்தா அவர்களின் தம்பி மகன் ரிசப் இன்பராஜ் மூன்று வயது
வரை பேசாமல் இருந்தான். இறை ஊழியர் தேவசகாயம்
அவர்களிடம் வேண்டுதல் வைத்தபின் சிறப்பாக பேசினான்.

மேற்குறிப்பிட்டுள்ள புதுமைகள் போன்று இன்னும் ஏராளம்
நிகழ்ந்துள்ளன. வேலை இல்லாமல் இருந்த பலருக்கு வேலை
கிடைத்திருக்கிறது. தீராத வாத நோய், புற்றுநோய் உடையவர்கள்
சுகமடைந்திருக்கிறார்கள். ஊமைகள் பேசியிருக்கிறார்கள். பலர்
மகப்பேறு பெற்றிருக்கிறார்கள். நீதிமன்றங்களில் ஏற்பட்ட சண்டைச்
சச்சரவுகள் தீர்ந்து சமாதானம் ஏற்பட்டிருக்கிறது. கடிதத் தொடர்பு
இல்லாமல் நெடுந்தொலைவில் இருந்தவர்கள் திடீரென வீடு
வந்திருக்கிறார்கள். வீட்டில் மனைவியுடன் கோபித்துக் கொண்டு
சென்ற கணவன் வீடு திரும்பி சமாதானமாக வாழ்கிறார். பலர் குடிப்
பழக்கத்தி-ருந்து விடுதலை பெற்றுள்ளனார். உயரத்தி-ருந்து
விழுந்த சிறுவர்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.
இவருடைய நினைவாகக் குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே
குருசடிகளும், தேவாலயங்களும் கட்டப்பட்டுள்ளன:
(i) இவர் பிறந்த ஊராகிய நட்டாலத்தில் இவர் நினைவாக
ஒரு சிற்றாலயம் எழுப்பப்பட்டுள்ளது. 14-01-2006 அன்று
இறை ஊழியர் நினைவு நாளில் வாரம் ஒருநாள் தியானம்
நடத்தும் இடமாக ஆயர். -யோன் . தர்மராஜ்
அவர்களால் அறிவிக்கப்பட்டது. 09-05-2008 அன்று இறை
ஊழியர் தேவசகாயம் தியான மண்டபம் மேதகு ஆயர்.
பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டது.
இந்துவாக அவர் வாழ்ந்தபோது அவர் வழிபட்ட இடமும்
அருகில் உள்ளது. அரசவை ஊழியர் என்ற முறையில்
அவர் பயன்படுத்திய ""நீண்ட வாள்'' மற்றும் ""கண்டக்
கோடாரி'' நட்டாலத்தில் பாதுகாக்கப்படுகிறது.
(ii) இவரைக் கொலை செய்ய சிறை வைக்கப்பட்ட
குளுமக்காட்டில் (பண்டாரக்காடு) இவர் நினைவாக
குருசடி அமைக்கப்பட்டுள்ளது.
(iii) இவர் வாழ்ந்த காலத்தில் தக்கலைக்கு வந்து
சென்றதன் நினைவாக இங்கு இவரின் பெயரில்
குருசடி அமைக்கப்பட்டுள்ளது.

(iv) புலியூர்குறிச்சியில் முட்டிடிச்சி வற்றாத நீர் ஊற்று
உண்டான இடத்தில் ஒரு நினைவுச்சின்னம்
கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே கோயில் ஒன்று
கட்டப்பட்டுள்ளது.
(v) ஆரல்வாய்மொழியில் இவர் சுட்டுக் கொல்லப்பட்ட
இடத்தில் கோயில் மற்றும் நினைவுச் சின்னங்கள்
உள்ளன. 12-01-2006 அன்று மதுரைப் பேராயர்.
பீட்டர் அவர்களால் இறை ஊழியர் தேவசகாயம்
அருங்காட்சியம் தொடங்கி வைக்கப்பட்டது.
(vi) விளவங்கோடு வெட்டுவென்னியில் தாலுகா
அதிகாரியின் தண்டனையை அனுபவித்து எந்தவித
-யும் ஏற்படாமல் செபித்துக் கொண்டிருந்தார்.
அவர் செபித்துக் கொண்டிருந்த இடத்தில் குருசடி
கட்டப்பட்டுள்ளது.
(vii) இராமன்புதூர் சிறைக்கு அருகாமையில் மக்கள்
சேர்ந்து தேவசகாயத்தின் காட்சி கிடைத்த இந்த
இடத்தில் ஒரு குருசடி கட்டினார்கள். அந்தப்
பகுதியில் தான் தற்போதைய மேல ராமன்புதூர்
திருக்குடும்பக் கோவில் இருக்கிறது என்று சில
வயதானவர்கள் சொல்கிறார்கள்.
இறை ஊழியர் தேவசகாயம் செய்த மற்றும் செய்து
வரும் புதுமைகளில் சிலவற்றை மட்டுமே இங்கே பதிவுச்
செய்துள்ளேன். இதில் சொல்லப்படாத புதுமைகள் ஏராளம்
உள்ளன என்பதை நாம் அறிவோம். நாமும் நற்செயல்கள்
புரிந்து வாழ்வதற்கு இறை ஊழியர் நமக்கு ஒரு முன்மாதிரி
என்பதை அறிந்து கொள்.
உன் அன்புள்ள,
மாமா.

15-11-2010
நாகர்கோவில்

பாசமிகு மாமாவுக்கு,

நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். இறைஊழியர் தேவசகாயம் தூய வாழ்வு வாழ்ந்தார் என்பதற்கான
சான்றுகள் பலவற்றை நீங்கள் தொகுத்து எழுதியிருந்தது
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. என்னுடைய வகுப்புத்
தோழிகளிடம் இறை ஊழியர் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து
கொண்ட போது அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
நானும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்
பெற்றிருக்கிறேன். இறை ஊழியரை மக்கள் தூயவராக,
புனிதராக தொடக்க முதலே ஏற்றுக் கொண்ட போதும்
திருஅவை அவருக்கு இதுவரை புனிதர் பட்டம்
கொடுக்கவில்லை என்ற செய்தியை அறிந்தேன்.
நமது மறைமாவட்டத்தில் அதற்கான முயற்சிகள் பல
எடுக்கப்பட்டு வருவதாக பங்குப் பணியாளர் அவர்கள் ஒருநாள்
திருப்பலியின் போது சொன்னார்கள். அதைப் பற்றி விளக்கமாக
எழுதுங்கள்.
உங்கள் பாசமிகு,
தேன்மொழி

கடிதம் 12 புனிதர் பட்ட நடவடிக்கைகள்

10-12-2010
பெங்களூர்

பாசமிகு தேன்மொழிக்கு,

உன் அன்பு மாமா எழுதுவது, நீ அனுப்பிய கடிதம்
கிடைத்தது. அரையாண்டுத் தேர்வு நெருங்கும் இந்நாட்களில் பள்ளிப் பாடங்களில் அதிகமாக கவனம் செலுத்து. அரையாண்டு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறேன்.
இறை ஊழியரின் புனித வாழ்வுப் பயணத்தைப் பற்றி
இதுவரை எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டிருந்தது உனக்கு
மட்டுமல்ல, உன் தோழிகளுக்கும் பயனுள்ளதாக இருந்ததை
எண்ணி மகிழ்கிறேன். இந்த நற்செய்தியை இன்னும் பலரிடம்
கொண்டுச் செல்லும் முயற்சி நம்பிக்கை உள்ள ஒவ்வொரு
கத்தோ-க்கருக்கும் உரிய கடமை என்பதை மறவாதே.
வாழும் போது தூய வாழ்க்கை வாழ்ந்து, புனிதத்தைப்
போற்றியவர் நம் இறை ஊழியர் தேவசகாயம். அவருடைய சாவு
அவரிடம் இருந்த புனிதத் தன்மையை சாகடிக்க முடியவில்லை.
எனவே அவருடைய நம்பிக்கை நிறை வாழ்வு மக்களை அதிகமாக
ஈர்த்தது.
அவருடைய உடலை கோட்டாறு தூய சவேரியார்
பேராலயத்தில் நல்லடக்கம் செய்து அவருடைய புனிதத் தன்மையை
திருச்சபையும் ஏற்றுக் கொள்ள மக்கள் அடித்தளம் அமைத்தனர்..
i) இறைஊழியர் தேவசகாயத்தின் இறப்பின் போது
இறை ஊழியர் தேவசகாயம் 14.01.1752-ஆம் ஆண்டு கொல்லப்பட்ட
போது கொச்சி ஆயர் மேதகு. கிளமென்ட் ஜோசப். சே.. தமது
மறைமாவட்டத்திலுள்ள எல்லா பங்குகளிலும் மணி அடிக்கவும்
""தெதேயும்'' என்ற நன்றிக்கீதம் பாடவும் செய்தார்.
ii) ஆயரின் ஐந்தாண்டறிக்கை
கொச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு. கிளமென்ட் ஜோசப்.
சே.சே. அவர்கள் திருத்தந்தை 14-ஆம் பெனடிக்டுக்கு 15.11.1756-இல்
அறிக்கை ஒன்று தயாரித்துக் கொடுத்தார். அதில் இறை ஊழியர்
தேவசகாயம் கிறிஸ்துவின் மேல் கொண்டிருந்த ஆழ்ந்த
நம்பிக்கைக்காக ஒரு மறைசாட்சியாக 14.01.1752-இல் துப்பாக்கியால்
சுட்டுக் கொல்லப்பட்டார் என்று விவரித்து உரோமைக்கு
எழுதியிருந்தார்.
iii) பொதுநிலையினரின் முயற்சி
நாகர்கோவில் கத்தோ-க்க சங்கம் என்ற அமைப்பைச்
சார்ந்தவர்கள் 23.10.1984 அன்று ஒன்று கூடி இறை ஊழியர்
தேவசாகயம் புனிதர்பட்ட நடவடிக்கை பற்றி கலந்துரையாடினர்.
நூற்றுக்கணக்கான கத்தோ-க்கர்கள் இதில் பங்கெடுத்திருந்தனர்.
புனிதர்பட்டப் பணிகளுக்காக திரு. அமலகிரி அந்தோணிமுத்து, திரு.
ஆன்றணி தம்புரான், திரு. .. தாஸ் ஆகிய மூவர் குழுவைத் தேர்வு
செய்தனர்.
இந்த மூவர்குழு 28.11.1984 அன்று கோட்டாறு ஆயர் மேதகு.
மரியானூஸ் ஆரோக்கியசாமியை சந்தித்து திருஅவைச் சட்டப்படி
புனிதர்பட்ட நடவடிக்கைகள் தொடங்க பரிந்துரைத்தனர். பணி.
லியோன் தர்மராஜ் அவர்கள் அந்தக்குழுவுக்கு ஆன்மீக
ஆலோசகராக ஆயர் அவர்களால் நியமிக்கப்பட்டு ஆறுபேர்
கொண்ட முதல் புனிதர்பட்டக்குழு அமைக்கப்பட்டது.
05.01.1985 அன்று இறை ஊழியர் தேவசகாயம் புனிதர்பட்டம்
பெற வேண்டுதல் செய்ய செபம் ஒன்றை ஆயர் மேதகு. மரியாலூஸ்
ஆரோக்கிய சாமி அவர்களே எழுதி வெளியிட்டார்.
iv) மறைமாவட்டத்தில் வேண்டுகையாளர் நியமனம்
1984 முதல் 1992 வரை செயல்பட்ட புனிதர்பட்டக் குழுவின்
பணிகள் ஆயருக்குத் தேவையான தகவல்களை தந்து புனிதர்
பட்டப்பணியை இன்னும் விரைவுபடுத்த வேண்டிய தேவையை
உணர்த்தியது.
அதனால் 01.01.1993 அன்று பணி. . கபிரியேல் அவர்கள்
புனிதர்பட்ட வேண்டுகையாளராக மேதகு ஆயர் -யோன் .
தர்மராஜ் அவர்களால் நியமிக்கப்பட்டார்கள்.
v) தமிழ்நாடு ஆயர் பேரவையின் கவனத்திற்கு
20.02.1993 அன்று கோட்டாறு மறைமாவட்ட பொதுநிலையினர்
தமிழ்நாடு ஆயர்களுக்கு புனிதர் பட்ட நடவடிக்கைகளை
பரிந்துரையைக் கொடுத்தனர். 01.03.1993 அன்று நடைபெற்ற
தமிழ்நாடு ஆயர் பேரவைக் கூட்டத்தில் புனிதர்பட்டநடவடிக்கைகள்,
அதற்கான தேவை ஆகியவை குறித்து ஆயர் -யோன் . தர்மராஜ்
அவர்கள் தெளிவாக எடுத்துச் சொல்ல அவர்களது ஒப்புதலையும்
ஆதரவையும் பெற்றார்.
vi) வரலாறு தொகுத்தல்
புனிதர்பட்டக் குழுவின் பரிந்துரையினால் முனைவர்.
பணி. நற்சீசன் வரலாற்று ஆவணம் ஒன்று தயாரிக்க
பணிக்கப்பட்டார். அந்தப் பணியை ஏற்றுக் கொண்ட பணி. நற்சீசன்
ஆவணங்களின் அடிப்படையில் இறை ஊழியர் தேவசகாயம்
அவர்களின் வரலாற்றைத் தொகுத்தார். அந்தத் தொகுப்பு புத்தகமாக
14.01.2003 (இறை ஊழியர் தேவசகாயம் நினைவு நாள்) அன்று
வெளியிடப்பட்டது.
இவருடைய இந்த வரலாற்றுத் தொகுப்பை 50 கட்டுரைகளாக
மாற்றி உரோமைக்குக் கொடுக்கும் பணியை முனைவர் பணி. ஜாண்
குழந்தை அவர்கள் செய்து முடித்தார்.
vii) உரோமை வேண்டுகையாளர்
உரோமையில் புனிதர்பட்டத்திற்கான நடிவடிக்கைகளை
மேற்கொள்ள பணி. ஜார்ஜ் நெடுங்காட் சே.. அவர்களை
வேண்டுகையாளராக ஆயர். -யோன் . தர்மராஜ் அவர்கள்
14.11.2003 அன்று நியமனம் செய்தார்கள். அவருக்குத் துணையாக
மறைமாவட்ட வேண்டுகை பொறுப்பி-ருக்கும் பணி. . கபிரியேல்
அவர்களை துணை வேண்டுகையாளராக நியமித்தார்கள்.
viii) திருச்சபை தடை இல்லை
இறை ஊழியரின் புனிதர்பட்டத்திற்கான பணிகளைத் தொடர
தடை எதுவும் இல்லை என்று உரோமை புனிதர்பட்டப் பேராயத்
தலைவர் 22.12.2003--இல் அறிவித்தார்கள்.
ix) வேண்டுகையாளர் வருகை
உரோமையி-ருந்து வேண்டுகையாளர் பணி. ஜார்ஜ்
நெடுங்காட் சே.. அவர்கள் 2004--ஆம் ஆண்டு சூலை மாதம்
கோட்டாறு மறைமாவட்டத்துக்கு வருகை தந்து இறை ஊழியர்
தேவசகாயம் தொடர்புடைய இடங்களைப் பார்வையிட்டார்கள். அந்த
நாள் வரை மறைமாவட்டத்தில் புனிதர் பட்டத்திற்காக எடுக்கப்பட்ட
முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளதாகப் பாராட்டினார்கள்.
தொடர்ந்து செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் சொல்-ச்
சென்றார்கள்.
x) வரலாற்றுக் குழு நியமனம்:
வேண்டுகையாளரின் வருகையின் போது, 1993--ஆம் ஆண்டு
கோட்டாறு ஆயர் உருவாக்கிய வரலாற்றுக் குழு
புனிதர்பட்டத்திற்கான முன்னேற்பாட்டு வரலாற்றுக் குழு என
ஏற்றுக்கொண்டார். மேலும் திருச்சபையின் புனிதர்பட்ட
நடவடிக்கைகள் ஒழுங்குகளுக்கேற்ப ஒரு வரலாற்றுக் குழுவை
ஆயர் நியமனம் செய்யக் கேட்டுக் கொண்டார்.
அதன்படி பணி. .. நற்சீசன், பணி. ஜாண் குழந்தை மற்றும்
திரு. வற்கீஸ் ஆன்றணி ஆகிய மூவரையும் 05.07.2004--இல்
வரலாற்றுக் குழு உறுப்பினர்களாக மேதகு ஆயர். -யோன்
. தர்மராஜ் அவர்கள் நியமித்தார்கள்.
xi) வரலாற்றுக் குழுவின் ஆய்வுப் பயணம்
13.09.2004 முதல் 28.10.2005 வரை வரலாற்றுக்குழு பலருடைய
துணையுடன் முக்கியமான ஆவணக் காப்பகங்களுக்குச் சென்று
தேவையான வரலாற்றுப் பதிவுகளை சேகரித்தனர்.
எர்ணாகுளம் உயர் மறைமாவட்ட ஆவணக் காப்பகம், கொச்சி
மறைமாவட்ட ஆவணக்காப்பகம், கொல்லம் மறைமாவட்ட
ஆவணக்காப்பகம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள கேரள மாநில
அரசு ஆவணக்காப்பகம், உரோமையிலுள்ள திருச்சபைத்
தலைமையிட ஆவணக்காப்பகம், நியூயார்க் நகரிலுள்ள பொது
நூலகம், உரோமையிலுள்ள இயேசுசபை ஆவணக்காப்பகம்,
உரோமையிலுள்ள தெரேசியானும் நூலகம், -ஸ்பனிலுள்ள
"பிபிலியோடெக்கனாசியோனல்', உரோமையிலுள்ள கிரகோரியன்
பல்கலைக்கழகம், உரோமையிலுள்ள உர்பான் பல்கலைக்கழகம்,
வத்திக்கான் இரகசிய ஆவணக்காப்பகம், உரோமையிலுள்ள கார்மல்
சபைத் தலைமையக ஆவணக்காப்பகம் போன்ற இடங்கள் இவற்றில்
குறிப்பிடத்தக்கன.
xii) மறைமாவட்ட விசாரணை மன்றம்
கோட்டாறு ஆயர் மேதகு -யோன் . தர்மராஜ் இறைஊழியர்
தேவசகாயம் பற்றிய சாட்சியங்களை சேகரிக்க 03.03.2006-இல் பணி.
எஸ். சாலமோன், பணி. . குழந்தைசாமி மற்றும் பணி. எம். சூசை
ஆகியோரை முறையே நீதிபதியாகவும், நீதி நெறியாளராகவும்,
பதிவாளராகவும் நியமித்து மறைமாவட்ட நீதிமன்றத்தை நிறுவினார்கள்.
இந்த நீதிமன்றம் 109 சாட்சிகளை விசாரித்து அறிக்கை கொடுத்தது.
ஷ்ண்ண்ண்) உரோமைப் புனிதர்பட்டப் பேராயத்திற்கு பரிந்துரை
15.11.2003-இல் ஆயர். லியோன் . தர்மராஜ் உரோமையிலுள்ள
புனிதர்பட்டப் பேராயத்திற்கு இறை ஊழியர் தேவசகாயம் புனிதர்
பட்டத்திற்கான பரிந்துரையைக் கொடுத்தார். 22.12.2003-இல்
உரோமைப் பேராயம் ஏற்றுக் கொண்டதற்கான ஒப்புதல் கொடுத்தது.
xiii) மும்மாத இதழ்
இறை ஊழியர் பற்றிய செய்திகளை பரவலாக மக்கள்
மத்தியில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் "தென்னக தீபம்' என்ற
பெயரில் மும்மாத இதழ் 03.12.2006 தூய சவேரியார் திருநாளில் ஆயர்
லியோன் . தர்மராஜ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த
இதழின் தற்போதைய பெயர் "மறைசாட்சி தேவசகாயம்பிள்ளை '
என்பதாகும். இதன் பொறுப்பாசிரியர் திரு. ஜாண் பிரான்சிஸ்,
வெளியீட்டாளர் பணி. செர்வாசியுஸ், வினியோக மேலாளர் திரு.
வற்கீஸ் ஆன்றணி ஆகியோராவர்.
xiv) மறைமாவட்ட விசாரணை நிறைவு விழா
கோட்டாறு மறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய
புனிதர்பட்டத்திற்கான தயாரிப்புப் பணிகளும் விசாரணையும் நிறைவு
பெற்றன. எனவே 07.09.2008-இல் கோட்டாறு தூய சவேரியார்
பேராலயத்தில் ஆடம்பர நிறைவுவிழா நடை பெற்றது. இவ்விழாவில்
மறைமாவட்ட விசாரணை மன்றம் எல்லா ஆவணங்களையும்
கோட்டாறு ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் அவர்களிடம் ஒப்படைத்தது.
தமிழக ஆயர்கள், கொல்லம் ஆயர் மற்றும் உரோமை
புனிதர்பட்ட நடவடிக்கை வேண்டுகையாளர் பணி. ஜார்ஜ் நெங்காட்
சே.. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்தனர். கோட்டாறு
மறைமாவட்ட அருட்பணியாளர்கள், துறவியர் மற்றும் பொது
நிலையினர் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.
xv) ஆவணங்கள் உரோமைக்கு அனுப்புதல்
24.09.2008-இல் ஆவணங்கள் அடங்கிய பெட்டகம் புது
டில்லியிலுள்ள திருத்தந்தையின் பிரதிநிதியிடம் ஒப்படைக்கப் பட்டது.
அங்கிருந்து உடனடியாக அது உரோமைப் புனிதர் பட்டப்
பேராயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
xiv) உரோமைப் புனிதர்பட்டப் பேராயம் ஒப்புதல்
கோட்டாறு மறைமாவட்டம், உரோமைப் பேராயத்திற்கு அனுப்பிய
ஆவணங்களை படித்தப்பின் அப்பேராயத்தலைவர் பேராயர்
ஆஞ்சலூஸ் அமாற்றோ .. 18.03.2010-இல் கோட்டாறு மறைமாவட்ட
ஆயருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், "கோட்டாறு
மறைமாவட்டம் இறை ஊழியர் தேவசகாயம் பற்றி நடத்திய விசாரணை
அனைத்தும் முறையாகவும் நேர்மையாகவும் நடைபெற்றுள்ளது என்றும்
அதற்கான சட்ட ஒழுங்குகள் எல்லாம் நன்கு பின்பற்றப்பட்டுள்ளன''
என்றும் நமக்கு நம்பிக்கை தரும் செய்தியைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உரோமைப் பேராயம் பணி. ஜாண் குழந்தை அவர்களை
வெளி ஒத்துழைப்பாளராக 17.07.2010 அன்று நியமனம் செய்து புனிதர்பட்ட
நடவடிக்கைகள் விரைவாக நடைபெற வழி செய்துள்ளது. புனிதர்
பட்டத்திற்கான காரணங்களை உரோமைப் பேராயம்
ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான நிலைப்பாட்டுக் கட்டுரை தயாரிக்கும்
பணியை பணி. சாண் குழந்தை அவர்களுக்குக் கொடுத்துள்ளது.
இவ்வாறு இறை ஊழியர் தேவசகாயம் புனிதர்பட்டப் பணிகள்
சிறப்பாக மறைமாவட்டத்திலும் உரோமையிலும் நடைபெற்று
வருகிறது.

xv) புனிதர்பட்டப் பணியில் பங்கெடுத்தோர்
இந்தப் பணிகள் இதுவரை சிறப்பாக நடைபெற முக்கியமாக
கோட்டாறு மறைமாவட்ட ஆயர்கள், மறைமாவட்ட முதன்மைப்
பணியாளர்கள், இறை ஊழியர் தேவசகாயம் தொடர்புடைய
பங்குகளில் பணியாற்றிய பங்குப் பணியாளர்கள் மற்றும் பொது
நிலையினர் பிரதிநிதிகள் மற்றும் இப்பணியில் தன்னார்வத்தோடு
தங்களை இணைத்துக் கொண்டுள்ள ஆர்வலர்கள் ஆகியோரின்
உழைப்பு மிகவும் போற்றுதற்குரியது.
xvi) நிறைவாக
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் இறை ஊழியர்
தேவசகாயம் வேதசாட்சி என அகில உலகத் திரு அவை அறிவிக்கும்
நாள் அருகில் உள்ளதை சுட்டிக்காட்டும் அறிகுறிகள் சில உள்ளன.
இந்தியச் சூழ-ல் கிறிஸ்தவ நம்பிக்கையை ஏற்றுக் கொண்ட
ஒரு விசுவாசி தேவசகாயம் என்பதாலும் திருமணமான பொது
நிலையினர் என்பதாலும் இறை ஊழியரின் பிறப்பின் முந்நூறாவது
ஆண்டு அண்மையில் உள்ளதாலும் திரு அவையால் வேதசாட்சி
என அறிவிக்கப்படும் வாய்ப்பை விரைவில் எதிர்பார்த்து செபிப்போம்.
கிறித்து பிறப்பு விழா விடுமுறைக்காக நான் ஊருக்கு
வருகிறேன். எனக்குத் தெரிந்த வரலாற்றுக் குறிப்புகளோடு
இறை ஊழியர் தேவசகாயம் அவர்களுடைய வாழ்வை
உனக்குச் சொல்-யிருக்கிறேன் நம் மண்ணின்
மறைசாட்சியைப் பற்றி இப்போது ஓரளவு புரிந்து
கொள்வாய் என நம்புகிறேன். நேரில் பார்க்கும் ஆசையோடு
இக்கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்.
உன் அன்புள்ள,
மாமா.


தெம்புடன் நடைபயில்வோம்...
இறை ஊழியர் தேவசகாயம்
மாற்று சமூகம் தேடிய சிற்பி
மக்கள் நம்பிய மாபெரும் போராளி
சோதனைகளை காலடி மிதித்து
போதனைகளால் சாதனை படைத்தவர்
சாதி சமயம் சீரழித்த சமூகத்தை
மோதி உடைத்து பகுத்தறிவு ஒளியேற்றி
உப்பாக ஒளியாக குமரி மண்ணில்
உவப்பாக உறுதியாக உலா வந்தவர்
மன்னன் இட்ட கட்டளைகள்
காவலரின் கொடுந் துன்பங்கள்
அந்தணரின் வசை மொழிகள்
நம்பிக்கையை குறைக்க வில்லை
விவிலியத்தின் அருள் மொழிகள்
நண்பர்களின் உடன் ஊக்கம்
பணியாளர்கள் விசுவாச அறிவுரைகள்
நிலைவாழ்வின் பாதை தந்தது.
மாற்று சிந்தனையில் மாற்றத்தைக் கொண்டு வந்த இவர் ஒரு
மாபெரும் மக்கள் போராளி.
மாற்றங்கள் வரும் என
சொல்லிக் கொண்டே
வாய்ப்புகளை நழுவ விடும்
மனிதர்கள் நாம்
சமுதாயம் சாக்கடை என்னும்
சாக்கு போக்குகளால்
ஒதுங்கி கொண்டிருக்கும்
மனிதர்கள் நாம்
யாராவது உலகை மாற்றட்டும் எனும்
வறட்டு மனநிலை மாறட்டும்
வேறு வழியில்லாமல் வாழ்கிறோம் எனும்
வேரற்ற மனநிலை மறையட்டும்
தம் வாழ்வை தரணிவாழக் கொடுத்த
இறை ஊழியர் வழி நம் வாழ்வாகட்டும்
காற்றின் திசைச் செல்லும் காகிதமாயில்லாமல்
மாற்றுப் பாதையில் பிறருக்காய் வாழ்ந்திடுவோம்
தூயவராய் திருஅவை அறிவிக்கக் காத்திருக்கும்
மாமனிதர் இறை ஊழியர் பாதையிலே
பூமிதனை இயங்கச் செய்வோம்
புதுத் தெம்புடனே நடை பயில்வோம்.



துணை நின்ற நூல்கள்

i) அமலகிரி அந்தோணிமுத்து வேதசாட்சி தேவசகாயம் பிள்ளை விரிவான
வரலாறு
நாஞ்சில் புக் ஸ்டால் - நாகர்கோவில் 1988, 2006
ii)சே.ரோ. நற்சீசன் மறைசாட்சி தேவசகாயம்
ஆவணங்கள் அடிப்படையில் ஒரு வரலாறு
அசிசி ஆப்செட் - நாகர்கோவில் 2009.
iii) . மாதவடியான் தேவசகாயம் பிள்ளை வரலாறு
அசிசி ஆப்செட் அச்சகம் -நாகர்கோவில் - 2008
iv) . புஷ்பராஜ், . ரெஜி வரலாற்றுப் பார்வையில் மறைசாட்சி தேவசகாயம்
ராஜ் பதிப்பகம் - நாகர்கோவில் - 2009
v) . மிக்கேல் தேவசகாயம் பிள்ளை
டெல்ட்டா, முளகுமூடு. 2004
vi) .பி. ஸ்டீபன் இரத்தம் சிந்தச் சிந்த
இறையூழியர் தேவசகாயம் பிள்ளை
நாகர்கோவில் - 2008
vii) ... தங்கசாமி வாஞ்சிநாட்டு வேதசாட்சி
தேவசகாயம் பிள்ளை வரலாறு
நாஞ்சில் பதிப்பகம் - நாகர்கோவில் 1989
viii) .பி. சேவியர் மறைசாட்சி தேவசகாயம் நிகழ்வுகள்
நாஞ்சில் பதிப்பகம். 2003
ix) இயேசு சபை குரு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை வரலாறு
நாகர்கோவில் - 2009.